
தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் மாணவர்கள், பெண்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் டேப்லட் வழங்கும் திட்டம், சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

டிஜிட்டல் கல்வி புரட்சி: 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லட்!
தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சகாப்தத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்கவும் உதவும். உலகளாவிய போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான அடித்தளமாக இத்திட்டம் அமையும்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் – சமச்சீர் வளர்ச்சிக்கு முன்னுரிமை
பெருகிவரும் நகரமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் அனைத்து நவீன வசதிகளுடன் ஒரு ஒருங்கிணைந்த நகரமாக திகழும்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.6,858 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ரூ.310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். இதனால் வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயனடைவர்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowதமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள்
தமிழ் மொழியின் பெருமையை உலகளவில் பரப்பும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு
- தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
- ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்
- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை கற்பிக்க 100 தமிழ் ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
- உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு

தொல்லியல் ஆராய்ச்சிக்கு புத்துயிர்
தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பை உலகறியச் செய்யும் விதமாக தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது:
- மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் ‘அகரம் – மொழிகளின் அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்
- தொல்லியல் பொருட்களின் உயர்தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு
- காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு
- எழும்பூர் அருங்காட்சியகத்தில் செப்புத் திருமேனிகளுக்கான தனி காட்சி அரங்கம் அமைக்க ரூ.40 கோடி
- ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியம் (ரூ.22 கோடி) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் (ரூ.21 கோடி) உருவாக்கம்
கிராமப்புற வளர்ச்சிக்கு உத்வேகம்
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்:
- ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
- 6,100 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.2,100 கோடி
- கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்புக்கு ரூ.120 கோடி
- 2,329 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக ரூ.1,087 கோடி
நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு
நகரங்களின் வளர்ச்சிக்கு:
- கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ. சாலைகள் மேம்படுத்த ரூ.3,750 கோடி
- சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு ரூ.3,450 கோடி

மகளிர் நலனுக்கான சிறப்பு திட்டங்கள்
பெண்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக:
- விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி மானியம்
- 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கம்
- சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
- 10 இடங்களில் புதிய தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ.77 கோடி
- சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா 1,000 மாணவியர் தங்கும் வகையில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்க ரூ.275 கோடி
- திருநர் சமூகத்தினருக்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் விரிவாக்கம்
கல்வித்துறை: மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள்
இந்த நிதியாண்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது:
- பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு
- அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.1,000 கோடி
- 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
- சேலம், கடலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு லட்சம் புத்தகங்களுடன் நூலகங்கள்
- உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி
- அரசுப் பல்கலைக் கழகங்களுக்கான தொகுப்பு நிதி ரூ.700 கோடி
- 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் 41,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு ரூ.550 கோடி
- 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
- சென்னை அறிவியல் மையம் அமைக்க ரூ.100 கோடி

மருத்துவத்துறை: சுகாதார சேவைகள் மேம்பாடு
மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில்:
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி
- கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசி – ரூ.36 கோடி
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1,461 கோடி
- டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.1,092 கோடி
- அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.348 கோடி
தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள்
தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில்:
- சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம்
- கோவை-சூலூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள்
- ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா மற்றும் விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா
- கடலூரில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் – ரூ.250 கோடி
- ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
- 9 இடங்களில் ரூ.366 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள்
- விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் – ரூ.50 கோடி
போக்குவரத்து மேம்பாடு: மெட்ரோ ரயில் விரிவாக்கம்
நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க:
- ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்
- பூந்தமல்லி-போரூர் உயர்வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திறப்பு
- கோவை (ரூ.10,740 கோடி) மற்றும் மதுரையில் (ரூ.11,368 கோடி) மெட்ரோ ரயில் திட்டம்
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கம் – விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை
- தாம்பரம்-வேளச்சேரி-கிண்டி, கலங்கரை விளக்கம்-உயர்நீதிமன்றம் வழித்தடங்களில் விரிவாக்கம்
- மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே போக்குவரத்து சாத்தியக்கூறு ஆய்வு

அனாதை குழந்தைகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை
சமூக நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு:
- இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை
- கோயில்களுக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்கள், 36.38 லட்சம் சதுர அடி மனைகள், 5.98 லட்சம் சதுர அடி கட்டடங்கள் மீட்பு – மதிப்பு ரூ.7,185 கோடி
- சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம்
- உதகமண்டலத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா
- கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கம்
தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், கிராமப்புற மக்கள் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.