“யார் இந்த தேவரடியார்கள்..!” அவர்களின் வரலாறு என்ன? – ஓர் அலசல்..
தேவரடியார்கள் இந்த வார்த்தை இதுவரை நீங்கள் கேட்டிராத வார்த்தைகளில் ஒன்றாக கூட இருக்கலாம். தமிழில் அடியார் என்ற சொல் நமக்குள் ஒரு மரியாதையை தரக்கூடிய சொல்லாகவும், ஆண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சொல் ஆகவும் இருக்கும்.
அதனால் தான் நாம் சிவனடியார்கள், பெருமாள் அடியார்கள் என்று அழைக்கிறோம். அது சரி அப்படி என்றால் இந்த தேவரடியார் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவரடியார் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு சேவை செய்யக்கூடிய அர்ப்பணிப்பு தன்மை உடையவர்கள் என்று பொருள். இதில் அடியார் என்ற சொல் “அடி” என்ற அடிப்படைச் சொல்லிலிருந்து வந்ததாகும்.
மேலும் தமிழைப் பொறுத்தவரை “அடி” என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள் தரும். எனவே தான் பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்களும், அடிகள்மார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் தேவர், தேவ என்றால் கடவுள் என்று பொருள்படும். இப்போது கூறுங்கள் தேவர் அடியார் என்றால் கடவுளுக்கு சேவை செய்யக்கூடிய நபர்கள் என்ற பொருளைத்தான் அது தருகிறது. மேலும் நீங்கள் கடவுள்களில் அடிமை என்று கூடி இவர்களை கூறலாம்.
சங்க காலத்தைப் பொறுத்தவரை கோயில்கள் எளிமையான இடங்களாகவே இருந்திருக்கின்றது. மேலும் அன்று இந்தக் கோயில்களுக்கு என்று தனித்த கலைஞர்கள் யாரும் இல்லை. அது மட்டும் அல்லாமல் சங்க காலத்தில் மதத்தின் செல்வாக்கு அதிகளவு புழக்கத்தில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சங்க காலத்தைப் பொறுத்தவரை இந்த தேவர் அடியார்கள் பற்றிய மரபு இல்லை என்று தான் கூற வேண்டும். அது சரி, இந்த தேவர் அடியார்கள் எப்போது உருவானார்கள் என்பதைப் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
களப்பிரர்கள் சமண சமயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காலத்தில் தேவரடியார்கள் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை. பல்லவர்கள் சமணத்தை விட்டு சைவ சமயத்தை தழுவிய பிறகு தான் கோயில்களை கற்களால் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதல் முதலில் கோவில்களை கட்ட ஆரம்பித்தவர்கள் பல்லவர்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து தான் கோவில் வழிபாட்டில் பெண்களை ஆடல் பெண்களாக நியமித்துள்ளனர். இவர்களை கூத்திகள் என்று அழைத்திருக்கிறார்கள். இது தொழில் நிமித்தமான பெயர் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேவரடிகள் என்ற பெயர் எந்த கல்வெட்டுகளிலும் இதுவரை கண்டுபிடிக்க வில்லை. அது போலவே அடிமை என்ற சொல்லும் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. இதனை அடுத்து நாம் ஆழ்ந்து ஆராய்கையில் சோழர்கள் காலத்தில் தேவர் அடியார்கள் ஓர் அமைப்பாக கோயிலுடன் இணைந்து இருக்கிறார்கள்.
இதற்கான சான்றானது கல்வெட்டுகளில் காணப்படுகிறது. குறிப்பாக இராசராச சோழன் காலத்தில் இந்த தேவரடியார்கள் ஒரு வலுவான அமைப்பாக மாறி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தலச்சேரிக்கு பல ஊர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து தேவரடியார்கள் என்ற பெயரை சூட்டி ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக வரலாறு கூறுகிறது.
பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் தேவரடியார்களாக மாறி இருக்கிறார்கள். சோழ அரசர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்தபோது இந்த தேவரடியார்கள் பெரும் நிலக்கிழார்களை நம்பி வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல் சில பெண்களை அடிமைகள் போல் சில பொற்காசுகளுக்காக கோவில்களுக்கு தேவரடியார்களாக விற்கப்பட்ட செய்திகளும் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.
இவர்களின் கால்களில் திரிசூலம் முத்திரை இடப்பட்டது ஆனால் அதற்கு சூட்டுக்கோல் முறை பயன்படுத்தவில்லை என்ற செய்தியை கேகே பிள்ளை அவர்கள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சில பெண்கள் தங்களையும் தங்கள் பேரன், பேத்திகள் ஆகிய 10 பேரை 30 காசுகளுக்கு விற்றுக் கொண்டதாக சில செய்திகள் கல்வெட்டுகளில் கிடைக்கப் பெற்றுள்ளது. இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் திரு வலாங்காட்டுடைய நாயனார் கோயிலுக்கு 700 காசுக்கு நான்கு பெண்கள் தேவரடியாராக விற்கப்பட்டு இருக்கக்கூடிய செய்தியை கே.கே பிள்ளை கூறியிருக்கிறார்.
மேலும் இந்த முறை மூலம் அரசால் கோயில்களில் கலை வளர்க்கக்கூடிய நபர்களாக இந்த தேவரடியார்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள் கோயில்களில் ஆடல், பாடல் ,பூஜை, பராமரிப்பு மேற்கொள்ள முன் வந்தவர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமே தேவர் அடியார் என்ற பெயர் ஆகும்.