தமிழனும், தமிழ் மொழியின் தொன்மையும்…!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ஞானம் கைக்குழந்தையாய் இருந்த வேளையிலே முன் தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழனின் பாரம்பரியம்,தமிழ் மொழியின் தொன்மையும் பன்னெடும் காலம் முதற்கொண்டு தோன்றின் புகழோடு தோன்றி இன்று வரை இளமையோடு இருக்கிறது.
இப்படிப்பட்ட தெய்வ ஒன்டமிழ் மொழியானது இன்று இந்திய அரசியல் சாசனத்தால் ஏற்று கொள்ளப்பட்ட 14 மொழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது.
தமிழ் மொழியை பொறுத்தவரை உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து என அனைத்தும் சேர்ந்து 247 எழுத்துக்கள் உள்ளது. எந்த மொழியிலும் இல்லாத ஆயுத எழுத்து நம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. அது போலவே சிறப்பு லகரத்தையும் இது கொண்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் தமிழ் எழுத்து முறை பிராமியிலிருந்து தோன்றியது என்றும் இது நாளடைவில் வட்டெடுத்துக்களாக உரு மாறி விட்டது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உலக மொழிகளிலேயே இல்லாத அளவு இலக்கியங்கள் அதிகளவு நிறைந்த மொழியாக நம் மொழி திகழ்கிறது. இங்கு தான் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்குகள் உள்ளது.
மேலும் அகநானூறு, புறநானூறு போன்றவை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மைகளை அழகாக எடுத்து கூறுகிறது. ஐம்பெரும் காப்பியங்கள் தமிழனின் பண்பாட்டை பறைசாற்றுகின்ற வகையில் உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பாடல் வரிகள் தமிழனின் பரந்த மனதை பறைசாற்றுகின்றது. ஐந்திலக்கணங்கள், நன்னூல், தண்டியடங்காரம் போன்றவை தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த அணிகலன்களாக இருக்கிறது.
கண்டங்கள் தாண்டி வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமது மொழியை விட்டுக் கொடுக்காமல் அதன் சிறப்பை எடுத்து பலருக்கும் கூறியதால் தான் இன்று வரை அழியாத அற்புத மொழியாக உள்ளது.
எனவே எக்காலத்திலும் தமிழ் தனித்து இயங்கக்கூடிய வல்லமை படைத்ததோடு என்றும் இளமையாக இருக்கும் மொழி. நம் தமிழ் மொழியானது மற்ற மொழிகளுக்கு எல்லாம் அன்னையாகவும் விளங்குகிறது. எனவே தாய் மொழியை மதித்து நம் மொழியை வளர்க்க நம் மொழியில் பேசுவதை வழக்கப்படுத்திக் கொண்டால் அது நம் மொழிக்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி என்றுமே அழியாத மொழியாக இருக்கும்.