• November 21, 2024

தமிழரின் மூத்த தெய்வம், மூத்தத் தாய் யார் தெரியுமா?

 தமிழரின் மூத்த தெய்வம், மூத்தத் தாய் யார் தெரியுமா?

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது ஒரு திரைப்படத்தில் இருக்கும் வசனம். ஆனால் இறைவன் ‘இயற்கையில் தான் இருக்கிறான்’ என்பது தமிழனின் சங்ககால சத்தியம். தமிழன் என்றாலே இந்துக்கள் என்ற ஒரு போலிச்சாயம் இன்று இருக்கும் நிலையில், சங்ககால தமிழர்கள் இயற்கையைதான் இறைவனாக வணங்கினார்கள். உலகின் மூத்தநாகரீகமாய் இருக்கும் தமிழனின் சமூகத்தில், தமிழர்களின் முதல் கடவுள் யார் என்கிற கேள்வி ஒரு மிக பெரியப் பதிலை பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் சிலைகள் ஒவ்வொன்றின் மீதும், ‘இதுதான் முதல் கடவுளாக இருக்குமோ’ என்கிற எண்ணம் நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது.

முதல் கடவும் யார் என்கிற கேள்விக்கும் இப்பொது செல்லாமல், மூத்த கடவுள் ஒன்றை நாம் மறந்துவிட்டோம் என்கிற வட்டத்துக்குள் வருவோம். தமிழரின் மூத்த தெய்வம், மூத்த கடவுள், மூத்தத் தாய் யார் தெரியுமா?
தவ்வை என்று அழைக்கப்பட்ட மூதேவி!

thavvai moothevi tamilnadu

அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் மூதேவி என்ற பெயருக்கு தவறான பொருளை அளித்தவர்கள் யார் என்று தெரியவில்லை. தமிழனின் பெருமையை தான் மறைக்கிறார்கள் என்று பார்த்தால், தமிழனின் தாய் தெய்வத்தையும் தவறாக குலைத்து வைத்திருக்கிறார்கள் சில மூடர்கள்.

மூதேவி என்றால், மூத்த தேவி. நம் முது தந்தையரை எப்படி ‘மூதாதையர்’ என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு ‘மூதேவி’ என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான ‘அக்கை’ என்கிற வார்த்தை எப்படி ‘தமக்கை’ ஆனதோ, அதேபோல் ‘அவ்வை’ என்ற வார்த்தை ‘தவ்வை’ என்று ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான் இவள் தவ்வை. சங்க இலக்கியங்களில் மாமுகடி, தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள், சேட்டை, கேட்டை உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்பட்டார் இந்த மூதேவி.

தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக “மூதேவி” இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்பாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சமணர்கள் கூட தவ்வையை வழிபட்டுள்ளனர்.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
– என்ற ஒளவையார் பாடலும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
– என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன.

உரத்தின் அடையாளம் ‘தவ்வை’. நெற்கதிர்களின் அடையாளம் ‘திருமகள்’. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சரியான சான்று. ‘தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய’தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. ‘சேட்டை’ மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. சங்ககாலத்தில் தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. 12 நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010-ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன.

‘தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும்’ என்பதற்கு ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

எவ்வளவு தான் ஆதாரங்கள் தந்தாலும், புராண கதைகளை சொன்னாலே தானே இங்கு சிலர் நம்புவார்கள். தவ்வை-கு ஒரு புராண கதயும் உண்டு. சைவ – வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழரின், உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன் மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.

thavvai god tamilnadu

என்னைப்பார் யோகம் வரும் என்று நாம் வாசலில் மாட்டும் கழுதையின் புகைப்படத்துக்கும், தவ்வைக்கும் தொடர்பு இருப்பதையும், தமிழகத்தின் தாய் தெய்வமான தவ்வையின் தொன்மங்கள் தமிழகத்தில் எங்கெங்கு இருக்கிறது என்றும், தவ்வையை இன்றும் யார்யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்!