“பெண்களால் ஏற்படும் சாபத்தை நீக்கும் முத்தாலம்மன்..!”. – வரலாறு என்ன சொல்கிறது..
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம் பகுதியில் அமைந்திருக்கும் முத்தாலம்மன் கோயிலின் வரலாறு மிகவும் நெடிய வரலாறு என்று கூறலாம். இந்த தெய்வம் பெண்களினால் ஏற்படும் பாவத்தை நீக்கி சாப விமோசனம் தருவதாக கூறப்படுகிறது.
அற்புத ஆற்றல் கொண்ட இந்த அம்மன் சிலை எப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகரம் பகுதிக்கு எப்படி வந்தது என்பதை நீங்கள் வரலாற்று பக்கத்தை புரட்டிப் பார்க்கும்போது தெள்ள, தெளிவாக தெரிய வரும்.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் வரி வசூல் செய்யக்கூடிய நபராக சக்கரராயர் என்ற அந்தணர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவரது குல தெய்வமான முத்தியாலு அம்மனின் மீது இவர் அதீத பக்தியோடு இருந்து இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விஜயநகர பேரரசானது வீழ்ச்சி அடைந்து, சுல்தான்களின் கட்டுப்பாட்டில் விஜயநகரம் சென்ற போது அந்த அந்தணர் தனது குலதெய்வ விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு வேறு இடத்திற்கு போக முடிவு செய்தார்.
இதற்காக தன் குல தெய்வத்திடம் அனுமதி கேட்க அந்த தெய்வமும் தென் திசை நோக்கி என்று குறிப்பால் உணர்த்தியதின் காரணத்தால், தன் கட்டுப்பாட்டில் இருந்த படைகளோடு குலதெய்வ விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு அந்த அந்தணர் நடந்தார்.
இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த அவர் தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் இருக்கும் அகரம் பகுதியில் ஓய்வெடுப்பதற்காக முகாமிட்டார்.
அந்த சமயத்தில் முத்தியாலு அம்மன் குறிப்பாக இந்த இடம் தனக்கு உரியது என்பதை உணர்த்தியதால், அந்த இடத்தில் கோயில் கட்டினார். பின் தினசரி வழிபாடுகளை பாரம்பரிய முறைப்படி செய்தார். இந்த கோவிலில் இருக்கக்கூடிய மூலவரின் பெயர் தான் முத்தியாலு அம்மன். இதுவே காலப் போக்கில் மாறி முத்தாலம்மன் என்று மாறியது.
முத்தாலம்மன் கோயில் பிரகாரத்தில் பூதராணியின் சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமும் பல்லி சத்தம் கேட்கும். இந்த சத்தத்தை அம்மனின் உத்தரவாக கருதி இன்று வரை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோலவே பிரகாரத்தின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு தரவில்லை என்று கருதப்படுகிறது. அப்படி சத்தம் கேட்கக் கூடிய சமயங்களில் திருவிழாக்கள் நடக்காது.
இந்த அம்மனை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் பெண்களால் சாபம் ஏற்பட்டு இருந்தால் அந்த சாபத்தை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை உண்டு என்று கூறுகிறார்கள். மேலும் இங்கு மாதம் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற நாட்களில் இங்கிருக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
எனவே உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் ஒருமுறை கண்டிப்பாக முத்தாலம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.