• November 21, 2024

உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

 உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ:

“சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன?

தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக தமிழில் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதை நாம் நிறுத்தவேண்டும். தர்மம் என்று சொல்லுக்கு பல அர்த்தங்கள் அகராதியில் இருக்கலாம். ஆனால் சனாதன தர்மம் என்று பேசும்போது, தர்மம் என்றால் கடமை என்று பொருள், சனாதனம் என்றால் நித்தியமானது, நிரந்தரமானது, நிலையானது என்று பொருள். சனாதன தர்மம் என்றால் நிரந்தர கடமை.

ஒவ்வொருவரும் அவரவர்க்கென, அவரவர் பிறந்த வர்ணம் அல்லது சாதியின் அடிப்படையில், விதிக்கப்பட்ட இந்த மாறாக் கடமைகளைச் செய்வதன் மூலமாகமாகவே இந்த உலகின் ஒழுங்கைக் நிலைநாட்டமுடியும் என்று சனாதனிகள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு சமூகப் பிரிவுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது என்று பேசுவதும் அனைத்து உயிர்களுக்கும் ஒரே அறம் என்று பேசுவதும் முற்றிலும் வெவ்வேறு உலகப் பார்வைகள். ஆரிய தர்மமும் தமிழ் அறமும் ஒன்றல்ல.

கேட்பதற்கு இயல்பாகவும் தர்க்க நியாயம் இருப்பதாகத் தோன்றும் இந்த சனாதன தர்மத்தின் சமூக வரலாற்று அடிப்படைதான் என்ன? வேறொன்றுமில்லை. ஆரிய சமூகத்தின் ஒரு பிரிவினராக இருந்த பிராமணர்கள், சமூகத்தில் தங்கள் நிரந்தர ஆதிக்கதை நிலைநிறுத்திக்கொள்வதற்காக உருவாக்கிய ஒரு முறைதான் இந்த சனாதன தர்மம்.

சமூகம் வர்ணங்களாக ஆக்கப்பட்டு, ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒரு கடமை உருவாக்கப்பட்டு, அவரவர் அந்தந்தக் கடமையை மாறாமல் மீறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பது அதன் அடிப்படை. மீறுவது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். சம்புகர்கள் மீறினால் ராமர்கள் தலைவாங்குவார்கள். ஏகலைவர்கள் மீறினால் துரோணாச்சாரியா்கள் விரல்வாங்குவார்கள்.

‘இந்து சமயம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (a way of life), அல்லது நிரந்தர நியதி (eternal law)’ என்று இந்து மதத் தலைவர்களும் நவீன கார்ப்பரேட் சாமியார்களும் சொல்வது உண்மைதான். அவர்களைப் பொறுத்தவரை கடவுள் அல்ல, மதம் அல்ல, தர்மம்தான் அடிப்படையானது. மதம் என்கிற பெயரிலான அமைப்பு முறைகளின் நோக்கம் இந்த தர்மத்தை நிலைநாட்டுவதே.

மதத்துக்காக சனாதன தர்மம் இல்லை, சனாதன தர்மத்துக்காகவே மதம் இருக்கிறது. கடவுள், வழிபாடு, கலாச்சாரம் எல்லாம் தர்மத்தைக் காப்பாற்றவே இருக்கின்றன. இதை எந்த சனாதனியும் மறுப்பதில்லை. கடவுளை அடைய நீங்கள் இன்னின்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கூறுவதைவிட, தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதரிக்கிறார் என்பதுதான் சனாதன தர்மிகளின் கோட்பாடு.

சனாதனத்தைக் காப்பாற்றுவதே கடவுளுக்கான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவரும் மீளவியலாது. தர்மத்தைக் காப்பாற்றும் பணி இல்லாத சமயங்களில், அவர்கள் திருவிளையாடல்களைச் செய்துகொண்டிருக்கலாம். மற்றபடி அசுரர்களிடமிருந்தும் அனாரியர்களிடமிருந்தும் ஆரிய மூவர்ணத்தாரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கடவுளர்களின் எண்ணிக்கை முப்பத்து முக்கோடியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து காக்கவேண்டியது ஒன்றை மட்டுமே. அது சனாதன தர்மம்.

வேதங்களிலும் உபநிடதங்களிலும் பிந்தைய சமஸ்கிருத நூல்களிலும் காணப்படும் எண்ணற்ற சுவராஸ்யமானக் கருத்துகளையும் தத்துவ வாசகங்களையும் பட்டியலிட்டு, இதெல்லாம்தான் சனாதன தர்மம் என்று பரப்பும் ஒரு போக்கு இருக்கிறது. சத்குருக்களும் ஸ்ரீஸ்ரீகளும் உற்பத்திசெய்யும் வெகுசன ஆன்மீக சரக்குகளான இவை எளிய மனங்களில் ஆர்வத்தைக் கிளர்த்துகின்றன. அந்தக் கருத்துகள் நமக்கு சனாதன தர்மம் என்கிற சொல்லின் மீது குழப்பத்தையோ மயக்கத்தையோ வரவழைக்கின்றன. ஆனால் மனுஸ்மிருதியும் கீதையும் மிகத்தெள்ளத் தெளிவாகவே சனாதனக் கடமைகளை நம்முன் வைக்கின்றன.

நிஜம் மிகவும் தெளிவானது. வருணாசிரம தர்மமே சனாதன தர்மம். அதாவது வர்ணங்களின் கடமையே, நிரந்தரக் கடமை. கடமை ஒருபோதும் மாற்றப்படமுடியாதது. பிராமண, சத்திரிய, வைசியர் ஆகிய இருபிறப்பாளர்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் சமூகப் பிரிவுகளுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவர்கள் அந்தந்தக் கடமைகளைச் செய்யவேண்டும். அந்தப் பிரிவுகளுக்காக உழைத்து மடிவதே நான்காம் வர்ணம் என்றழைக்கப்படும் சூத்திரர்களுக்கான கடமை. கடமைகளிலேயே மிகவும் புறக்கணிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காகவே அவர்ணர்கள் என்றொரு பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆதிக்கவாதிகள் இட்ட கடமையை மீறி உரிமையைக் கேட்டு, அதனால் பொது உரிமைகளிலிருந்து விலக்கப்பட்ட மக்கள்தான் அவர்கள்.

இந்தப் பிரிவினர் அனைவரும் அவரவர் பிறந்த வர்ணம் அல்லது அதன் ஒரு பகுதியாக உள்ள சாதியின் வேலைகளை மட்டுமே வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும், நிலையாக, நிரந்தரமாக அவற்றைச் செய்யவேண்டும், பரம்பரை பரம்பரையாக அவர்கள் அதை மட்டுமே செய்யவேண்டும் என்பதுதான் நிரந்தரக் கடமை என்பதன் பொருள். இது பிராமண, சத்திரிய, வைசியர்களின் என்றென்றைக்குமான நிரந்தர ஆதிக்கத்தை உருவாக்குகிறது, சூத்திர, அவர்ண மக்களுக்கு காலகாலத்துக்குமான நிரந்தர அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது.

சனாதன தர்மத்தையும் வர்ண-சாதிய முறையையும் பிரிக்கமுடியாது. அதனையும் ஆணாதிக்கத்தையும் பிரிக்கமுடியாது. அதனையும் கர்மவினைக் கோட்பாட்டையும் பிரிக்கமுடியாது. கர்மவினைக் கோட்பாட்டையும் அடிமைத்தனத்தையும் பிரிக்கமுடியாது.

சனாதன தர்மம் என்கிற இந்தக் கோட்பாட்டை மரபுவாதிகள் உயிராகப் பிடித்துக்கொண்டுவருகிறார்கள். ஆனால் காலனிய காலத்தில் சமூகத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றபோது, இந்த நிரந்தர அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுபட முயற்சி செய்வதைக் கண்டு சனாதனிகள் அதிர்ந்துபோனார்கள். அப்போது பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் – பிரம்மசமாஜம், இராமகிருஷ்ணா மடம் போன்றவை- இதில் நெகிழ்வை கோரின. ஆனால் இறுதியில் அவை சனாதன தர்மத்திடம் சரணடைந்தன.

ராஜாராம் மோகன் ராய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, சுப்பிரமணிய பாரதி போன்றார் அதை முழுமையாகக் கடந்துவிடவில்லை. அவர்கள் சனாதனத்தின் கொடூரத்தை உணர்ந்து பிறகும், அதைத் தீர்க்கமுயலாமல், அதன் வரையறைகளை சற்று மாற்றி அமைக்க முயன்றுதோற்றார்கள். இந்தியாவில் நல்ல நோக்கமுள்ள பல சமய சீர்திருத்தவாதிகளைப் பொறுத்தவரை, சனாதன தர்மம் என்கிற அழகிய பாம்பு அவர்களை எப்போதும் அச்சுறுத்திக்கொண்டேதான் இருந்தது.எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டு சமயச் சீர்திருத்தவாதிகள் எப்போதுமே அந்த எல்லைக் கோட்டைக் கடக்க அஞ்சினார்கள்.

ஆனால் அருட்பிரசாக இராமலிங்கர் அவர்களில் ஒருவர் அல்லர். அவர் வெறுமனே சமயச் சீர்திருத்தம் செய்தவர் அல்லர். அவர் சனாதன தர்மத்தை நேரடியாக நிராகரித்தார். “

நன்றி : ஆழி செந்தில்நாதன்