• December 21, 2024

மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

 மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

தமிழக வீர வரலாற்றில், தவிர்க்க முடியாதவர்கள் மூவேந்தர்கள். சேர சோழ பாண்டியர்களை பற்றிய பல்வேறு வரலாற்று குறிப்புகள் நம்மிடையே இன்று ஆழமாக இருக்கிறது.  ஆனால் ‘இந்த மூவர் மட்டும்தான் அந்த காலகட்டத்தில் வீரத்தோடும் விவேகத்தோடும் இருந்தார்களா?’ என்றால் அதுதான் இல்லை.  இவர்களையும் தாண்டி பல்வேறு குறு மன்னர்களும் முக்கியமாக வேளிர் குலத்தை சேர்ந்த பல மன்னர்கள், வீரத்தில் சிறந்திருந்தார்கள்.

அவர்களைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புலவர்கள் வழியாக நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் சேர சோழ பாண்டியர்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, இந்த மன்னர்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்படியான ஒரு வீரமிக்க அரசனைப் பற்றி தான், இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

ஏழு வள்ளல்கள்

தமிழகத்தில் எத்தனையோ கொடை வள்ளல்கள் வாழ்ந்திருந்த போதும், பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்ற பெயருடைய ஏழு வள்ளல்களை பற்றி தான், இலக்கியம் சிறப்பாக குறிப்பிட்டு இருக்கிறது.

வீரத்தால் புகழடைந்த பல மன்னர்கள் இருப்பது போல, தன்னுடைய கொடையாளும் இந்த கடை ஏழு வள்ளல்கள் புகழ்பெற்று இருந்தார்கள்.

இந்த கடை ஏழு வள்ளல்களில், ஒரு வள்ளலான, சிறந்த மாவீரனான, சிறந்த படையைக் கொண்ட, அதிலும் சிறந்த குதிரையை கொண்ட, ஒரு அரசனைப் பற்றி தான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். அவர்தான் மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி

பல்வேறு புலவர்களால் அதிலும் குறிப்பாக கபிலரால் புகழ்ந்து பாடப்பட்டவர் தான் இந்த காரி. உலகத்து சான்றோர்கள் எல்லாரும், வியக்கும் அளவிற்கு, கொடை கொடுத்தவர் தான் இந்த காரி.

இனிமையாக பேசும் தன்மை கொண்டவர் தான் இந்த காரி. தன்னை நாடி வருபவர்களுக்கு பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல, யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், பரிசாக வழங்கியவர் தான் இந்த காரி.

மூவேந்தர்களுடைய போர் முடிவை, முடிவு செய்பவர் இந்த காரி.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை தான் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

மலையமா நாடு

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது இந்த நாடு.

இந்த பகுதியை மலாடு, மலையமா நாடு என்றும் அழைத்தார்கள் பல புலவர்கள். அந்த பகுதியை ஆண்டவர் தான் மலையன், மலையமான் என்று அழைக்கப்பட்ட காரி.

திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் இந்த  வள்ளல் காரி.  சிறுபாணாற்றுப்படையில் இவருடைய தோற்றத்தைப் பற்றியும், குணத்தைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது. என்ன தெரியுமா?

பார்த்தாலே அச்சம் தரக்கூடிய, மிகுந்து வெளிச்சம் கொண்ட வேலினை உடையவன்,  பெரிய கைகளைக் கொண்டவன், நல்ல வார்த்தைகளை பேசக்கூடியவன்,  காரி என்ற குதிரையை உடையவன் என்ற இவருடைய குணத்தை பற்றியும் தோற்றத்தை பற்றியும் குறிப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல.

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
கழல்தொடித் தடக்கைக் காரி (சிறுபாணாற்றுப்படை 93-95)

காரியின் வீரம்

காரியின் உதவி யார் பக்கம் இருக்கிறதோ, அவர்களுக்கே வெற்றி என்ற ஒரு சூழல் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது அதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்லலாம்.

தமிழ்நாட்டை மூவேந்தர்கள் ஆட்சி புரிந்தாலும், இவர்களுக்குள்ளே எப்பொழுதும் சண்டை நடந்து கொண்டு இருக்கும்.

சோழ பேரரசியின் ஆரம்பகட்ட காலத்தில் அந்த சோழ பரம்பரையில் சிற்றரசனாக பெருநற்கிள்ளி என்ற சோழ அரசன் உறையூரை  ஆண்டு வந்தான்.

அவனுடைய காலத்தில் தொண்டி பகுதியை ஆண்டு வந்த, சேர பரம்பரையில் வந்த ‘யானைக்கண் செய்’ என்ற சேர சிற்றரசனுக்கு எப்படியாவது உறையூரை அடைய வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆகவே உறையூரைக் கைப்பற்ற முடிவு செய்து, பெருநற்கிள்ளியின் மீது படை எடுத்துச் சென்றான்.

போரில் சோழனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.  எப்படியும் அவன் தோல்வி அடைந்து, இறந்து விடுவான் என்ற ஒரு சூழல் இருக்கும் பொழுது, அந்த சமயத்தில் அந்த செய்தி மலையமான் காரிக்கு தெரிவிக்கப்பட்டது.

சோழ சிற்றரசன் ஆன பெருநற்கிள்ளியின்  பழைய நண்பன் தான், நம் காரி. ஆக நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு பெரும் படையோடு உறையூருக்கு வந்த  காரி,  சேர சிற்றரசன் ஆன யானைக்கண் செய்யின் படையை துரத்தி அடித்து, மீண்டும் உறையூரை கிள்ளிக்கு பெற்று தந்தான் காரி.

இவ்வாறு சோழன் மட்டும் கிடையாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மூவேந்தர்களுக்கும் தனித்தனியாக பல உதவிகளை காரி செய்து இருக்கிறார்.  அதனால் இந்த மூவேந்தர்களுமே, காரியை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். பல புலவர்கள் காரின் வீரத்தைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள்.

எந்த அளவிற்கு என்றால்,காரியின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ,  அவர்களுக்கு வெற்றி உறுதியான ஒன்று. காரியிடம் பல்லாயிரக்கணக்கான பலம் பொருந்திய வீரர்கள் கொண்ட, ஒரு பெரும் படை இருந்தது. போர்களத்தை நோக்கி அவன் குதிரை மேல் செல்லும் போதும், அந்த மண் நடுங்கும்.. எதிரியின் மனம் ஒடுங்கும்.

ஆகவே எந்த ஒரு அரசனுக்கு போரில் உதவி தேவைப்படுகிறதோ, அவர்கள் போரிடும் போது, காரியை துணைக்கு அழைத்துக் கொள்வார்கள்.

காரி எந்த வேந்தனுக்கு தன்னுடைய ஆதரவை தருகிறானோ, அவனே போரில் வெற்றி பெறுவான். இன்னும் சொல்லப்போனால் காரியின் ஆதரவு இருக்கிறது என்று சொன்னாலே, அந்தப் போரில் அவர்களுடைய  வெற்றி உறுதியாகி விட்டது என்ற அர்த்தம்.

இதையெல்லாம் விட வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களுமே, காரியை புகழ்ந்து தான் பேசுவார்கள். அதுதான் இவருடைய வரலாற்றில் இருக்கும், ஒரு மிகச்சிறந்த தனிச்சிறப்பு.

போரில் வெற்றி பெற்றவர்கள் “காரி எனக்கு துணையாக இருந்ததால் தான், நான் வெற்றி பெற்றேன்” என்று மனதார, உளமாற ஒப்புக் கொள்வார்கள்.

அதைப்போல் போரில் தோற்றவர்கள் “எதிரணியில் காரியின் துணை அவர்களுக்கு இருந்ததால் தான், அவர்கள் வெற்றி பெற்றார்கள், நாங்கள் தோற்றோம்” என்று சொல்வார்கள்.

ஆக ஒரு போரில் ஒரு வேந்தன் உடைய வெற்றியை, தீர்மானிப்பவனாக, நிர்ணயிப்பவனாக, காரி இருந்திருக்கிறான் வரலாற்றில்…

ஒரு வள்ளல்

இவ்வளவு பெரிய மாவீரன், எப்படி கடையேழு வள்ளல்களில் ஒரு வள்ளலாக மாறினார் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இங்கு தான், இந்த மாவீரனுக்கு உள்ளே இருக்கும், அந்த வள்ளல் குணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

போரில் வெற்றி பெற்ற வேந்தன், காரிக்கு எண்ணற்ற பல பரிசுகளை வழங்குவார்கள். வெறும் பொருட்கள் மட்டும் அல்லாமல், ஒரு சில ஊர்களையே பரிசாக தருவார்கள். 

அனைத்து பரிசுகளையும் பெற்றுக் கொண்டு நாடு திரும்பும் காரியை, புகழ்ந்து பாடுவதற்காக பல புலவர்களும், பாணர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள்.  காரி வந்தவுடன் அவர்கள் மனதார காரியின் வீரத்தை  புகழ்ந்து பாடுவார்கள்.  அவ்வாறு பாடிய அனைவருக்கும், அவன் பெற்று வந்த பல பரிசுகளை, வாரி வாரி வழங்கும் வழக்கத்தை வைத்திருந்தான் காரி.

தன்னுடைய அரண்மனை வாயிலில், எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் எடைபோட்டு பார்க்காமல், அனைவருக்கும் வேண்டியதை கொடுத்துக்கொண்டே இருப்பான் காரி. 

இதனால் இவருடைய புகழ் தமிழ் நிலம் முழுக்க பரவியது. இதை கேள்விப்பட்ட புலவர் கபிலர் எப்படி பாரியை காண விரும்பினாரோ, அதேபோல் காரியையும் பார்ப்பதற்காக திருக்கோவிலுக்கு வந்து, காரியின் பெருமையை கேட்டு தெரிந்து, பிறகு பாடினார்.

“இருமுடி காரி, உன்னுடைய நாடு மிகப் பாதுகாப்பான ஒரு நாடு. கடல் உன் நாட்டை அழிக்காது. பகை வேந்தர்கள் கூட உன் நாட்டை, எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். மேலும் நீ பரிசாகப் பெற்ற பல ஊர்களை,  அந்தணர்களுக்கு கொடையாக கொடுத்து விட்டாய்.  அது மட்டும் அல்ல மூவேந்தர்களுக்கு நீ போரில் உதவி செய்ததால்,  அதில் கிடைத்த விழு புண்களை மட்டும் நீ வைத்துக் கொண்டு,  மற்ற அனைத்து பரிசுப் பொருட்களையுமே, நீ தன்னோடு வைத்துக் கொள்ளாமல், உன்னைப் பற்றி பாடிய புலவர்களுக்கு பரிசாக தந்து விட்டாய். உனக்கென்று இருப்பது, உன் கற்புடைய மனைவியுடைய தோள்கள் மட்டும் தான். இப்படி இருக்கும்போது உன்னிடத்தில் காணப்படும் பெருமிதத்திற்கு என்ன காரணம் என்று? எனக்குப் புரியவில்லை” என்று கபிலர் பாடியிருக்கிறார்.

‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்’

மேலும் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர், தன்னிடம் கொடை கேட்டு வருபவர்களின் மனதை, மயிலிறகு வருடுவது போல், இனிய சொற்களை பேசுபவன் காரி. மேலும், தலையாட்டம் என்ற அணிகலனை தலையிலும், கழுத்தில் மணியையும் அணிந்த குதிரைகளை, வருபவர்களுக்கு பரிசாக தருவான் காரி என்று, குதிரைகளை பரிசளித்தது குறித்து இவர் பாடி இருக்கிறார்.

வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகைந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரி 

மேலும் புலவர் பெருஞ் சித்திரனார் “காரி, தனக்கு மிஞ்சியதே தானம் என்று இல்லாமல், அனைத்தையும் பிறர்க்கு கொடுத்து மகிழ்ந்தவன்” என்றும் புகழ்ந்து பாடியுள்ளார்.

அந்தோ ! புலவரின் வறுமை தான் என்னே!
அவர் சில சொல்லி என்? பல சொல்லி என்?
காரி தன்னைப் புகழ்ந்த காலத்துத்தான் ஈய வல்லனோ?
அல்லன், அல்லன்,இவன் தன்னைக் கண்டவர்க்கெல்லாம்
களிப்புடன் ஈயும் கடப்பாடுடையவன்” 

நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு “தேர்வண்மலையன்” என்ற பெயரும் உண்டு.

காரியின் ஈகை குணம்

மலையமான் திருமுடிக்காரி மற்றவர்களைப் போல் மது அருந்தி மயங்கி மகிழ்ச்சியடைந்து, கொடை வழங்குபவன் அல்ல. மது அருந்தாமல் இருக்கும்போதும், மகிழ்ச்சியுடன் கொடை வழங்குபவன்.

காரியின் ஈகை குணம் இயற்கையாகவே அவனுள் இருந்த ஒன்று, பிறரைப் போல செயற்கையாக வளர்த்துக்கொண்டது அல்ல அது.

அவனைப் பாடிச் சென்றவர் வெறுங்கையுடன் திரும்புவது கிடையது. அவனைக் காணப் புறப்பட்டவர்களுக்கு அது நல்ல நாளாக இல்லாவிட்டாலும், நிமித்தங்கள் பார்த்து தீய நாளாக இருந்தாலும், தன் கொடை குணத்தால், அவர்களுக்கே வேண்டியதை குடுத்து, பல பரிசுகளை தந்து, சிறந்த நாளாக காரி மாற்றிவிடுவான். 

இவன் கொடை வழங்கியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அவர்களை ஒரு உவமை மூலம் விளக்க வேண்டுமென்றால், முள்ளூர் மலையின் உச்சியில் விழுந்த மழைத் துளிகளை விட, அதிகம் என்று கூறலாம்.

மாரி ஈகை மறப்போர் மலையன்

புறநானூறு 158

இவ்வாறு கொடைகளித்து கொடைகளித்து அவனுடைய கரங்கள் சிவந்தே போனது என்று, பல புலவர்கள் குறிப்பாக புலவர் கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், பெருஞ்சித்திரனார் போன்றோர் பாடி இருக்கிறார்கள்.

மேலும் காரி ஒரு சிறந்த கல்விமானாக இருந்திருக்கிறார். அவருடைய எல்லைக்கு உட்பட்ட பல ஊர்களில் கல்விக்கூடங்களை அமைத்து இருக்கிறார். 

மெளரியர்களை ஓடவிட்டு காரி

மேலும் காரின் வீரத்திற்கு ஒரு உதாரணமாக, அக்காலகட்டத்தில் வடநாட்டில் பேரரசர்களாக இருந்த மெளரியர்களை, மலையமான் காரி விரட்டிய நிகழ்வும் இருக்கிறது.

மௌரியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக  தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆரம்பித்தார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள், திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதன் மீது போரிட முடிவு செய்து, தயாரானார்கள்.

மிக பெரிய படையோடு மலையமான் பகுதியை சூழ்ந்து முற்றுகையிட்டார்கள்.

இந்த தகவல், காரியின் காதுகளுக்கு எட்ட, அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய படைகளோடு போர்க்களம் வந்தான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. பலர் மாண்டனர். மற்றவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். 

கை வேலினை மட்டுமே பயன்படுத்தி, ஒட்டு மொத்த மௌரியர்களை,  காரி, அந்த படைகளை ஓடவிட்டதாக வரலாறு குறிப்பு இருக்கிறது. அதை வரலாற்று ஆய்வாளரான மன்னர் மன்னனும் உறுதி படுத்தியிருக்கிறார்.

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலருடன்
கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியது

திருமுடிக்காரி பட்டம்

ஒரு சிற்றரசனாக இருக்கும் மலையமான் காரி, எப்படி மலையமான் திருமுடிக்காரி ஆனார் என்பதையும், நாம் இங்கு பார்க்க வேண்டும்.

அந்த காலத்தில் முடி அணியும் உரிமை, அதாவது மணிமகுடம் அணியும் உரிமை, சேர சோழ பாண்டியர்களுக்கும், சில பெரும் புலவர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஒருமுறை மூவேந்தர்கள் தங்களுக்குள் சண்டை போடாமல், ஒற்றுமையாக இருந்த சமயத்தில், அவர்கள் ஒன்று கூடி பேசிய சமயத்தில், காரியை பற்றியும் பேசி இருக்கிறார்கள். அவருடைய வீரம், விவேகம், வள்ளல் தன்மையை பற்றி பேசி, பிறகு மூவரும் சேர்ந்து காரிக்கு முடி சூட்டி, அதையணியும் உரிமையை வழங்கலாம் என்று தீர்மானித்தார்கள்.

பிறகு மலையமான் காரிக்கு ஒரு பெரு விழா நடத்தி, அவருக்கு முடி சூட்டினார்கள். அதுவரை ‘மலையமான் காரி’ என்று அழைக்கப்பட்டவர், பிறகு ‘மலையமான் திருமுடிக் காரி’ என்று அழைக்கப்பட்டார்.

காரியின் குதிரை

காரியைப் பற்றி சொல்லும் பொழுது, அவருடைய குதிரையைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.  மலையமன் காரி எந்த அளவிற்கு பெயரும் புகழோடும் இருந்தாரோ, அதே அளவிற்கு அவருடைய குதிரையும் இருந்திருக்கிறது.

காரியின் குதிரை,  கருப்பு நிறத்தைக் கொண்டதாக இருந்தது. அதனால் அதற்கும் காரி என்ற பெயர். காரியின் குதிரையான காரியும், அவருடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு போர்க்களத்தில், அவருடைய வேகத்தை இன்னும் அதிகரிக்கும். 

வெட்சிப் போர் தலைவன்

மலையமான் காரிக்கு “வெட்சிப் போர் தலைவன்” என்ற ஒரு பெயரும் இருக்கிறது. 

பகைவனுடைய ஊரில்போய் உள்ள பசுக்களை, அவர்களோடு போரிட்டு,  கவர்ந்து கொண்டு வருவது என்பது, பழந்தமிழகத்தில் அடிக்கடி நடந்த ஒரு சாதாரண நிகழ்ச்சி. இதை திருட்டு என்றோ, களவு என்றோ சொல்லமாட்டார்கள். இதை வெட்சிப் போர் என்று சொல்வார்கள்.

இந்த வெட்சிப் போரைச் சிற்றரசர்களும், வேந்தர்களும் கூட செய்தார்கள். முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி, இரவில் குதிரை மேல் சென்று, பகைவர் ஊரில், ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவதில் சிறந்த வீரனாக, தலைவனாக இருந்திருக்கிறார். இதை பற்றி கபிலர் புகழ்ந்து பாடி இருக்கிறார்.

மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
எல்லித் தரீஇய இனநிரை

காரியின் வரலாற்றில், அவர் அதிகமான் நெடுமான் அஞ்சி-யிடம் தோற்றதாக ஒரு குறிப்பு இருக்கிறது .

வல்வில்ஓரி – காரி

கடையெழு வள்ளல்களில் மற்றொரு வள்ளலான,  வல்வில்ஓரியை போரில் கொன்றவர் திருமுடிக்காரி தான். அதனால் ஓரியைக் கொன்ற காரியை பழிவாங்க, ஓரியின் நண்பன் அதிகமான் நெடுமான் அஞ்சி காரியின் மீது படையெடுத்தான். அப்போது காரியின் படைகள் ஒரு போர் முடிந்து, ஓய்வில் இருந்த காரணத்தால், அதிகமானின் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. 

சிறிதுகாலம் கழித்து சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையின் உதவியோடு, சேரன் அதிகமானைக் கொன்று, காரியின் நாட்டை அவரிடமே மீட்டு கொடுத்தான் சேரன்.

ஆக மலையமான் திருமுடி காரியை  பற்றி பல்வேறு குறிப்புகள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு போன்ற பல சங்கப் பாடல்களில் நிறைய இருக்கிறது. 

காரி, வீரத்தில் மட்டுமல்ல, நெஞ்சில் ஈரத்திலும் யாருக்கும் நிகரில்லாத வள்ளலாக இருந்திருக்கிறார். 

Watch this article in VIDEO MODE – YouTube