• November 21, 2024

காற்றுக்கென்ன வேலி – பெண் வெளி

 காற்றுக்கென்ன வேலி – பெண் வெளி

பாடலதிகாரம் – 2

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?

ஒரு பெண் தனக்கான தேடலில் ஈடுபடும்போது, அது நட்போ, காதலோ வேறு எந்த வகையான உறவோ, அதில் அவளது கட்டுடைத்தல் நினைத்துப் பார்க்க முடியாத பரிமாணத்தை தொட்டுவிடும். “என் உறவுக்கான தேடல் இங்கே நிறைவடைந்தது“ என்று நினைக்கும் பெண்ணின் மனநிலை என்பது காட்டாற்று வெள்ளம். அத்தகைய ஒரு பெண்ணின் உணர்வுகளின் உற்சாகம் கரைபுரண்டோடுவதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.

திருமணமான வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்து விவாகரத்து பெற்ற பெண். கைக்குழந்தையுடன் உள்ளவர். திருமணத்திற்கு முன்பு, தான் காதலித்த ஆண்மகனை சந்திக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த உணர்வலையின் பின்னணியில் பாடுகின்ற பாடலிது. இந்தப் பாடலைக் கேட்கும்போதே நமது மனமும் உடலும் பொங்க ஆரம்பித்துவிடும். பாடலின் துள்ளல் நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும்.

இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும்.

‘தோல்விக்கெல்லாம் தண்டவாளத்தில் விழுறதுதான் தீர்வுன்னா நான் எத்தனை முறை விழுந்திருக்கணும்’

எனக்கூறுவார் படத்தின் கதாநாயகி அனு. ரொம்ப யோசிக்க வைக்கும் வரிகள். நம்மில் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமூக அல்லது குடும்ப சிக்கல்களின் காரணமாக அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழமுடிவதில்லை. அடுத்து ஒரு உறவை தேர்ந்தெடுப்பதிலும் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு சமூக காரணிகள் தடையாகவே இருக்கின்றன.

முதல் திருமணம், உறவு, காதல் என்பதிலேயே சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண், தனது துணையை இழந்தோ அல்லது துணையைப்பிரிந்தோ இருந்தால் அவளுக்கான உறவுத்தேடல் அத்தனை எளிதல்ல. ஆனால், “யாருக்காகவும் நான் வாழவில்லை. எனக்கான தேடல் என்னுடையது” என ஒரு பெண் தன்னை ரசிக்க, தன் வாழ்வை ரசிக்கத் தொடங்கிவிட்டால், அந்த வாழ்க்கைப் பயணத்தின் கட்டுடைத்தலும் அவளுக்கே அவளுக்கானதாக மாறிவிடுகிறது. அவளது பயணமும் அழகாகி விடுகிறது.

அனுவைப்போல நம் வாழ்க்கையை எதிர்கொள்ளவே நம்மில் பலரும் நினைக்கிறோம். சுதந்திர காற்றை சுவாசிக்க, பொங்கும் கடலைப்போல் வாழ்வை நேசிக்க நினைக்கிறோம். தனக்காக, தான் ஆசைப்படும் வாழ்வை நிஜத்தில் வாழத்துடிக்கிறோம்.

காற்றுக்கென்ன வேலி

நாயகி அனு, அவளது வாழ்க்கையை அவளே தீர்மானிக்க, அவளாக இருக்க தனது காதலை, தன்னில் உடைந்து போகும் மெல்லிதயங்களை, தனக்குள் நொறுங்கும் உணர்வுகளை அப்படியே ஏற்கிறாள். அவள் வாழ்க்கையை அவள் வாழ முற்படும்போது வாழ்க்கை அழகாகிறது. அனுவைப்போலவே நாமும் நமது வாழ்வை அழகாக்கிக் கொள்ளலாம்.


இந்தப்பாடலில் எனக்குப் பிடித்த சிலவரிகள்:

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?


உஷா பாலசுப்ரமணியம்

உஷா பாரதி

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாத ராஜாளி…தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தைனையாளர்.


பாடலதிகாரம் – 1 : அவள் அப்படித்தான் – உடலரசியல்!உறவுகள் தொடர்கதை