“தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் ஊர்கள்..!”- நீங்களும் போய் பாருங்கள்..
இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் பழைய தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பல பகுதிகள் உள்ளது. அதுவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்த பகுதிகளை கட்டாயம் ஒவ்வொரு தமிழர்களும் பார்வையிடுவது அவசியம் என்று கூறலாம்.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஊர்கள் அனைத்துமே தொல் இயல் தளங்கள் என்று கூறலாம். இங்கு பண்டைய தமிழர்களின் நாகரிக வளர்ச்சி மற்றும் அவர்களின் நினைவு சின்னங்கள், அதிக அளவு உள்ளதால் நமது பாரம்பரியத்தை பறை சாற்றும் ஊராக இவை திகழ்கிறது.
அந்த வகையில் முதலாவதாக திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பற்றி பார்க்கலாம். இந்த ஆதிச்சநல்லூர் தாமிர பரணி ஆற்றங்கரையோரத்தில் தனித்தனி குடியிருப்புகளை கொண்ட ஒரு கோட்டை தளமாக இருந்தது என கூறலாம். இந்த இடத்தில் தொழில்துறை நடவடிக்கைகள் அதிக அளவு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.
மேலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுக்கள் குடியிருப்புகள் அழகான உருவத்தோடு இருக்கக்கூடிய பானை ஓடு போன்றவை கண்டுபிடித்ததின் மூலம் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் இடமாக இந்த ஊரில் திகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்யலாம்.
இரண்டாவதாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்ற கிராமத்தில் பழங்கால வேத கல்லூரிகள் இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளது. மேலும் இங்கு தமிழ் கல்வெட்டுகள், மற்றும் தமிழ் படுக்கைகள், இயற்கையால் ஆன ஒரு குகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 2 நூற்றாண்டு வரை சிவப்பு மற்றும் கருப்பு வர்ணம் பூசப்பட்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்றாவதாக மதுரைக்கு அருகில் இருக்கும் தேவன் குறிச்சியில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல்கள், கல்மணிகள், சிவப்பு மற்றும் கருப்பு மணிகள் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அவர்களின் நாகரிகத்தை நமக்கு எடுத்து உணர்த்துகிறது.
தேவன் குறிச்சியில் சைவம் மற்றும் சைனம் செழித்து வளர்ந்திருந்தது. பழைய கோவில்களின் மலை அடிவாரங்களில் புலியுடன் போரிட்டு வீரம் அடைந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நாயக்கர் காலத்தில் நடப்பட்ட நடுக்கல்களும் உள்ளது.
அடுத்ததாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமணல் பகுதியில் பழங்கால வணிகம் செலுத்து வளர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சங்க இலக்கியத்தின் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகர் சேர வம்சத்தின் பண்டைய நகரம். இது உயர்தர இரும்பு மற்றும் மணிகள் தயாரிப்பதில் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட போது சிந்து எழுத்துக்கள் போன்ற வேலைப்பாடு கொண்ட புதிய கற்கால கருவி உட்பட்ட பழங்கால கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கிமு 1500 காலத்தைச் சேர்ந்த 4 சிந்து சமவெளி அடையாளங்களுடன் கிராஃபிட்டி சின்னங்களைக் கொண்ட பெரிய கற்கால மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது போலவே கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருநந்திக்கரை குகைக்கோயிலில் ஒரு பழமையான பாறை கோயில் என்று கூறலாம். கிபி 7 நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் ஜைனர்களால் நிறுவப்பட்டது. பின்பு இது இந்து ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கோவில் மலைகளில் மகாபாரதம், ராமாயண காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் பிரம்மதேசம், சோழ, பாண்டியபுரம், மகேந்திரவாடி, பனமலை, கடற்கரை கோயில், சித்தன்னவாசல், திருக்கடிகை ஜம்பை கிராமம் போன்ற பகுதிகளில் சுற்றுலா செல்லும்போது அங்கும் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றக் கூடியவற்றை பார்த்து மகிழலாம்.