“சுல்தான்களை மிரள வைத்த சம்புவராயர்கள்..!” – படை வீட்டுத் தமிழ் மகன்..
மூவேந்தர்களின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த வேளையில் அவர்களின் வழி தோன்றல்களாக சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள். இவர்களது ஆட்சியானது 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 14 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தது என கூறலாம்.
இவர்கள் ஆரணியை அடுத்த படை வீட்டை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தை ஆண்டார்கள். வடபண்ணை முதல் காவிரி வரை இவர்களது ஆட்சி பரந்து விரிந்து இருந்தது.
காளை உருவத்தை கொடியில் கொண்டிருந்த இவர்கள் படைவீடு, விரிஞ்சிபுரம் என்ற இரண்டு இடங்களை தலைநகராக கொண்டு செயல்பட்டு வந்தனர். இந்த படை வீடானது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக இருந்தது. அதுபோலவே விரிஞ்சிபுரம் கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்திருந்தது.
படைவீட்டில் இரண்டு கோட்டையின் அடித்தளங்களை எப்போதும் நீங்கள் பார்க்கலாம். இது சும்மா 1000 மீட்டர் நீளம் அகலம் கொண்டது. பெரிய கோட்டையில் மன்னரும், சிறிய கோட்டையில் அமைச்சர், தளபதி, அகம்படையாளர்கள், நிர்வாகிகள் இருந்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள்.
இந்த கோட்டையை யாரும் எளிதில் அடைந்து விட முடியாதபடி மலையின் உச்சியில் இருந்துள்ளது. எனவே சுரங்கம் வழியாகத்தான் கோட்டையை அடைய முடியும். மேலும் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பாக அரணும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்புவராயர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் மாலிக் கபூர் தலைமையில் சுல்தானியர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளை நோக்கி படையெடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் அரசு,மக்கள் மற்றும் கோயில் சொத்துக்களை சூறையாடினார்கள்.
குறிப்பாக இந்த மாலிக் கபூர் தலைமையிலான படைகள் மதுரை, ராமநாதபுரம், திருவரங்கம் கோயில்களை கொள்ளை அடித்த நேரம் சம்புவராயரின் படைவீட்டுயை சேர்ந்தவர்கள், சுல்தானியர்களை நுழைய விடாமல் முனைப்புடன் அரண் அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டார்கள்.
மேலும் மதுரை பகுதியில் இந்த சுல்தான்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்புவராயரின் ஆட்சி பகுதிக்கு வந்த வண்ணம் இருந்த சமயத்தில் அவர்களுக்கு வாலாஜாபேட்டையில் உள்ள கீழ்மின்னல், குடியாத்தம், செங்கல்பட்டு பகுதிகளில் புகலிடங்கள் அளித்ததாக கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளது.
மதுரையைப் பிடித்த சுல்தானியர்கள் ஏன் அதன் பிறகு தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை என்ற கேள்வி இன்று வரை புரியாத புதிராகவே பலருக்கும் உள்ளது.
இந்நிலையில் சம்புவராயர்கள் சுல்தானியர்களுக்கு அடங்கி ஆட்சியை செய்திருக்கலாம் என சில வரலாற்று குறிப்புகளில் கூறப்பட்டு இருந்தாலும் அது பற்றிய ஆதாரம் இது வரை கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்த சுல்தானியர்கள், சம்புவராயர்கள் மீது போர் தொடுக்காமல் இருந்திருப்பதே உண்மை என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் சம்புவராயர்கள் மிகச்சிறந்த வில்லாளிகள் மட்டுமல்லாமல் சோழர் ஆட்சி நடைபெற்ற போது பல பெரிய போர்களில் தலைமை தாங்கி போர் புரிந்தவர்கள்.
அதுமட்டுமல்லாமல் சிங்களரிடம் ஆட்சியை இழந்து நின்ற பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியருக்கு மீண்டும் ஆட்சியை மீட்டு தந்தவர் பல்லவராயர் என்ற சம்புவராய தளபதி தான்.
எனவே தான் சம்புவராயர்களை “போர் குடிகள்” என்று பெருமையை மிக சொல் கொண்டு அழைத்திருக்கிறார்கள். இவர்களை போரில் எதிர்ப்பது கடினம் என்பதை உணர்ந்துதான் சுல்தான்கள் இவர்களிடம் மோதாமல் இருந்திருக்கலாம்.
எனவே தான் மாலி கபூரால் தொண்டை மண்டலம் வழியாக தமிழகத்தில் நுழைய முடியவில்லை. போர் குடிகளாக திகழ்ந்த இவர்கள் ஆட்சி அமைத்த பிறகும் பிரதேசத்தின் மீது அதிக அளவு போர் தொடுக்கவில்லை.
இதற்கு காரணம் மக்களுக்கு நிலையான ஆட்சியை வழங்கவும் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் தான் அவர்கள் சிந்தனை இருந்தது எனக் கூறலாம். மேலும் இவர்கள் காலத்தில் நில சீர்திருத்தங்கள் பலவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, பழவேற்காடு, திருவானைக்கா போன்ற பகுதிகளில் பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.