” இதுதான் சரியான உணவு உண்ணும் முறை” – சங்க நூல்கள் வகுத்த நெறிமுறை..
வாழை இலையில் உணவை பக்குவமாக உண்டு வந்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தது. இன்று துரித உணவுகளை உண்டு, நாக்குக்கு அடிமையாகி பலவித வியாதிகளின் கூடாரமாக எதிர்கால தலைமுறை உருவாகி வருகிறது.
இந்த அவல நிலையை தவிர்க்க நீங்கள் பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் எதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை மிகத் தெளிவான முறையில் கூறியிருக்கிறார்கள் அதை கடைபிடித்தாலே ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ முடியும்.
இவையெல்லாம் உண்மையா என்று பகுத்தறிவு பேசி பாழாய் போவதை விடுத்து சங்க இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறிய கருத்துக்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களது பழக்க வழக்கங்களை மாற்றி அதை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் போது நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
அந்த வகையில் நீங்கள் எவ்வாறு உணவினை உண்ண வேண்டும் என்பதை பற்றிய கருத்துக்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் உணவினை உட்கொள்வதற்கு முதலில் இனிப்பு பண்டங்களை முதலிலும் கசப்பான உணவுகளை கடைசியிலும் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இருக்கக்கூடிய உணவுகளை இடையில் நீங்கள் உண்ண வேண்டும் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கும் விதிமுறையாகும்.
இந்த கருத்தை உணர்த்தக்கூடிய பாடல் வரிகள் இதோ
“கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் உண்”
அறிவியல் கூற்றுப்படி முதலில் இனிப்பை சாப்பிடும் போது உங்களுக்கு அதிக அளவு உமிழ் நீர் சுரந்து, உங்களது உணவு எளிதில் செரிமானமாக வாய்ப்புகள் உள்ளதால் தான் முதலில் இனிமை இனிப்பை சாப்பிடக் கூறி இருக்கிறார்கள்.
நீங்கள் தனியாக அல்லாமல் வயதில் மூத்தவர்களோடு அமர்ந்து உண்ணும்போது அவர்களின் வலப்பக்கம் அமர்ந்து உண்ணுவது சிறப்பு. மேலும் உண்டு முடிப்பது வரை நீங்கள் பந்தியில் இருந்து எழுந்து செல்லாமல் அவருக்காக காத்திருந்து உணவினை அருந்திவிட்டு பின் எழுந்து செல்வது சிறப்பானது.
நீங்கள் உணவை அருந்தி முடிந்த பிறகு உங்களுடைய உண்ட தட்டு அல்லது இலையை மிக சிறந்த முறையில் நீக்க வேண்டும். எச்சில் நீங்கும்படி உங்கள் வாய் மற்றும் உதடுக்கு அடியில் நன்கு துடைத்துவிட்டு மூன்று முறை நீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த செய்தியை சீவக சிந்தாமணி சிறப்பாக பகிர்ந்துள்ளது.
வாசநற் பொடியும் நீரும் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
புசுறுத் தங்கை நீரை மும்முறைகுடித்து முக்கால்
காசறத் துடைத்த பின்றைக் கைவிரலுறுப்புத் தீட்டித்
தூசினா லங்கை நீவியிருந்தனன் தோற்ற மிக்கான்.
உணவினை உண்ணும் போது படுத்து கொண்டோ நின்று கொண்டோர் திறந்த வெளியிலோ உண்ணக்கூடாது என்பதை ஆசாரக்கோவை 23இல் கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் நாம் உணவை எப்படி உட்கொள்கிறோம் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
மேலும் அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ளக்கூடாது என்று ஆத்திச்சூடி கூறுகிறது.
“மீத்தூண் விரும்பேல்” என்ற பாடல் வரிகள் இதை கூறுகிறது அதாவது அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை தான் இது உணர்த்துகிறது.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இனி உணவு உண்ணும் போதும் மேற்கூறிய விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.