குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
ஒரு குழந்தை பிறக்கும் போதுதான், ஒரு அம்மாவும் அப்பாவுமே புதுசா பிறக்குறாங்க. ஒரு குழந்தையோட சேர்ந்து நாமளும் வளருறது தான் நல்ல குழந்தை வளர்ப்பு..!
குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து நினைவில் கொள்ளவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை ஆகும். குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டு, அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது என்பதே உண்மை.
குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனினும் குழந்தைகளுக்கு யாரை பிடிக்கும்? எதை பிடிக்கும்? என்ற கேள்விக்கு இங்கு யாராலும் சரியான பதிலை சொல்லிவிட முடியாது. குழந்தையை பாசத்துடன் வளர்ப்பதற்கும், செல்லம் தருவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் இங்கு பல பெற்றோர்களுக்கு புரிவதில்லை. அதேபோல் ‘பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும்’ என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
பலர் தங்கள் தகுதிக்கு மீறி, சில விஷயங்களை குழந்தைகளுக்காக செய்கின்றனர். குழந்தைகளின் விருப்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது கடினம் என்பதுபோல, அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை அவர்களிடம் திணிப்பதும் மிக கடினம் மற்றும் கொடுமையானது. எனவே அவர்களுக்கு பிடிக்காததை செய்வதை பெற்றோர்கள் தவிர்க்கலாம்.
குழந்தைகளை ‘தங்கள் விருப்பத்தின்படி வளர்ப்பது தான் சிறந்த குழந்தை வளர்ப்பு’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டால், உடனே நடன பள்ளியில் சேர்த்து விடுகிறோம். மழலை மொழி மாறாத குழந்தைகளை, பாடல் கற்றுக்கொள்ள அனுப்பி விடுகிறோம்.
இது நம்மில் பலர் செய்யும் தவறு. அடுத்த வீட்டு குழந்தைகளை விட, நம் குழந்தை அதிகம் கற்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு அதிகம் உள்ளது. ஆனால் குழந்தைக்கு பிடிக்காத மற்றும் வராத விஷயத்தில் அவர்களைக் கொண்டு சென்று விட்டு, குழந்தைகளுக்கு மனரீதியான பிரச்சனைகளை குழந்தைகளுக்கு, சிறு வயது முதலே பெற்றோர்கள் தருகின்றனர்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்களிடம் வீட்டு படங்களைப்பற்றியே முதலில் பெற்றோர்கள் கேட்கிறார்கள். இது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தன்னுடன் படிக்கும் மற்றொரு குழந்தையை தன்னோடு ஒப்பிடுவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை.
குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்கள் கற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் உதவ வேண்டும். குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும், அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது! எது கெட்டது! என்பதில் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை, குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதின் அடிப்படை விதிகள்.
பொதுவாக குழந்தைகள் தவறு செய்யும்போது, நம்மில் பலர் பெரும்பாலும் கோபப்பட்டு அடிக்கிறோம் அல்லது கடும் சொற்களால் குழந்தைகளை புண்படுத்துகிறோம். ஆனால் இவை இரண்டுமே தவறான வழிகாட்டுதல்கள். குழந்தை தவறு செய்யும் பொழுது, அவற்றிலுள்ள நியாயம் – அநியாயம் ஆகியவற்றை குழந்தை அறிவதில்லை. எனவே குழந்தைகளிடம் அவற்றிலுள்ள தவறான விஷயங்களை எடுத்துக் கூறி, மறுமுறை அதை செய்யாமல் இருக்க பெற்றோர்கள் உதவ வேண்டும்.
இது மட்டுமே ஒரு குழந்தை திரும்ப திரும்ப ஒரு தவறை செய்யாமல் இருக்க வழிவகுக்கும். பெற்றோர்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமை காப்பது நன்று.
குழந்தைகளோட நிறைய பேசணும். சொந்தங்கள், உறவுமுறைகள் சொல்லி குடுத்து வளர்க்கணும். உதவி செய்யும் பழக்கத்தை அவர்களிடம் விதைக்கவேண்டும்.
பிரபலங்களா இருந்தாலும் எளிமையாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கதைகளாக சொல்லி தரவேண்டும். பணத்தோட மதிப்பை உணர குழந்தைகளுக்கு முதலில் செலவு பண்ண கற்று தரவேண்டும். தேவையானவற்றிக்கு செலவு செய்ய தெரிந்தவர்களால் மட்டும் தான் சேமிக்கவும் முடியும் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
சிறு சேமிப்பு, எதிர்காலத்திற்கு எவ்வளவு உதவியா இருக்கும் என்பதை சொல்லி தரவேண்டும்.
ஒரு தாய், தன் கணவரின் உழைப்பையும், அவரின் திறமைகளையும் ரசிக்கிற மாதிரி குழந்தைகளிடம் சொல்லவேண்டும்.
ஒரு தகப்பன், தன் மனைவி நமக்காக எவ்வளவு கஷ்டப்படறார்கள் என்பதையும், அவர்களின் திறமைகளை குழந்தைகள் முன் பாராட்டவும்கற்றுக்கொள்ளவேண்டும்.
பாராட்டு பெறும் குழந்தைய விட, அழகான பாராட்டை ரசிக்க தெரிஞ்ச குழந்தைகள், ரொம்பவே தன் வாழ்க்கையை வடிவமைக்க பழகிக்கொள்வார்கள். வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ளும் பண்பை சொல்லித்தரவேண்டும்.
அன்பு, சிரிப்பு போல, கோபமும் கண்ணீரும். அதவிட ரொம்ப அழகானது என்பதை அதை யாரிடம் வெளிப்படுத்தவேண்டும் என்பதை குழந்தையாக இருக்கும் போதே அவர்களிடம் அதை பழக்கப்படுத்தவேண்டும். அதற்கு முதலில் நாம் அவர்கள் அதை கவனிக்கும் விதமாக நமக்குள் நற்பண்புகளை வளர்த்து வாழவேண்டும்.
பாலியல் தொந்தரவுகள், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை தொழிலாளர் முறை, பெற்றோர் அலட்சியம், புத்தகச் சுமை, பொதுத் தேர்வு அச்சுறுத்தல், தேர்வு தோல்வி பயம், கவனிப்பற்ற சூழ்நிலை ஆகிய பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை விடுவித்து, அவர்களின் பருவத்துக்கேற்ற குழந்தைத் தன்மையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வகையில் அனைவரும் செயல்படுவது அவசியம்.