“2000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல்..!” ரோபோட்டுகளை பயன்படுத்தி ஜாடிகள் மீட்கப்படுமா?
பன்நெடும் காலமாகவே உலகில் கப்பல் பயன்பாடு ஆனது இருந்துள்ளது. இந்த கப்பல் ஆனது வணிகம் மட்டுமல்லாமல் மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் பயன்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கப்பல்கள் சூழ்நிலை காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் கடலுள் மூழ்கியுள்ளது. இது போல பல கப்பல்கள் கடலுக்குள் மூழ்கிய பிறகு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க என தனி ஆய்வாளர்கள் கடுமையான போராட்டங்களை சந்தித்து, அந்த கப்பல் பற்றிய விவரங்களை கண்டறிய முற்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் சில ஆய்வாளர்கள் மூழ்கி இருக்கும் கப்பல்களில் புதையல்கள் இருக்கும் என்ற நோக்கில் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றை இத்தாலி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது கிபி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கப்பலாக இது இருக்கலாம் எனவும் கடல் விபத்தின் மூலம் இந்த கப்பல் மூழ்கியுள்ளது என்பது தற்போது உள்ள கடல் ஆய்வாளர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஆனது 20 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம் என்றும் இந்தக் கப்பல் மத்திய தரைக் கடல் மற்றும் தெஹ்ரானின் கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்தில் ஏற்பட்டு 525 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் என கூறி இருக்கிறார்கள்.
தற்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கப்பலை கண்டுபிடித்து இருப்பதோடு, இந்த கப்பல் மூழ்கிய இடமான தற்போதைய இத்தாலி தலைநகரான ரோமில் இருந்து சுமார் 50 மைல்கள் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பழமையான துறைமுகத்தில் ஒன்றான சிவிட்டாவெச்சியாவிற்கு அருகில் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்து இருக்கும் ஆய்வாளர்கள் இதனை 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த கப்பலின் உடைந்த பாகங்களோடு சில ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாடியில் எண்ணெய் மற்றும் ஒயின் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தற்போது சில உடைக்கப்படாத சீல் இடப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாடிகளின் உள்ளே ஒயின் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய ஆய்வாளர்கள், அப்படி ஒயின் ஒரு சமயம் கண்டுபிடிக்கப்பட்டால் அதுவே உலகின் மிகப் பழமையான ஒயின் ஆக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.எனினும் சீல் இடப்பட்ட இந்த ஜாடிகளை எடுப்பதில் தற்போது சிக்கல்கள் உள்ளதாக இத்தாலி அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் ரோபோட்டுகளை கொண்டு இந்த ஜாடிகளை மீட்டெடுக்க கடுமையான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவு உதவி செய்யும் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. ஏற்கனவே இதுபோல பல்கேரிய கடல் பரப்பில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அந்த கப்பலின் வயது சுமார் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்பட்ட வரும் நிலையில் தற்போது இந்த கப்பலானது ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.