நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி? “காத்திருப்பது என்பது ஒரு துருபிடித்த வியாதி”
நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் இதை நேரம் என்று சொல்லுவார்கள். எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர் இதை, காலம் என்றே சொல்லுவார்கள். ‘நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல, காலனும், காலமும் நம்மை துரத்துகிறார்கள்’ என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு.
மனித வளத்தில் மூன்று முக்கியமானது பேச்சாற்றால், எழுத்தாற்றால், செயலாற்றல். இதனுடன் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றலும் மிக அத்தியாவசியமானது. “நேரத்தை பயன்படுத்துவது எப்படி” என்று படிப்பதற்கு முன், ‘நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி’ என்று பழகுவது தான் மிக சிறப்பானது.
எவர் ஒருவர் தன் இளம் பருவத்திலேயே நிலம், நீர், தங்கம் போல, நேரம் என்பதும் ஒரு செல்வம், அது ஒரு சொத்து என்பதை புரிந்து கொண்டார்களோ! அவர்களே இன்று வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், எப்படி ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் அதிமுக்கியமோ, அதுபோலவே வாழ்வில் வெற்றியடைய ஒவ்வொரு நொடியும் மிக முக்கியம். நேரத்தை வைத்து மனிதர்களின் சில வகைகளை கொஞ்சம் பாருங்கள்!
- நேரத்தை மதிக்காதவர்கள்
- நேரத்தை வீனாக்குபவர்கள்
- நேரத்தை கொல்பவர்கள்
- நேரத்தை காசாக்கியவர்கள்
- நேரத்தை சேர்த்தவர்கள்
- நேரத்தை உபயோகிப்பவர்கள்
- நேரத்தை உயர்த்தியவர்கள்
- நேரத்தை புகழாக்கியவர்கள்
- நேரத்தை வியாதியாக்கியவர்கள்
நேரம் என்பது நாம் பிறந்த உடனே, இறைவன் நம் கையில் கொடுத்தனுப்பிய சொத்து என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள்.
தேங்காயை உடைத்து உண்ணத் தெரியாத நரிபோல, இங்கு பலர் நேரத்தை உருட்டி கொண்டிருக்கிறார்கள். காலநேரத்தை கழிப்பதை விட்டுவிட்டு, அதை எப்படி சரிவர பயன்படுத்துவது. தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், தேசத்துக்கும், ஏன் உலகத்துக்குமே, இந்த ஆறாவது பூதமான நேரம் என்ற ஆற்றலை, கையில் பிடித்து
நிரந்தரமான பயனுள்ள பொருளாக மாற்ற நம்மால் முடியும்.
ஒரு சரியான செயல் செய்ய, எல்லா நேரமும் சரியான நேரம் தான். எந்நாளை விடவும் இன்னாள் நன்னாள் என்றே எண்ணுங்கள். தள்ளிப்போடுவது, தாமதப்படுத்துவது, நேரம் பார்ப்பது, காத்திருப்பது என இந்த எண்ணங்கள் யாவும் சோம்பல், அச்சம், நம்பிக்கையின்மை போன்றவைகளின் பிள்ளைகள். தள்ளிப்போடுவதும், தவிர்ப்பதும் பிரச்னையை தீவிரப்படுத்தும். நாளை பார்க்கலாம் என்ற மனோபாவம், அனைத்து பிரச்னைகளின் பிறப்பிடம். தள்ளிப்போடும் ஒரு சிறிய செயல் கூட, நாளை நமக்கு தொல்லை தரும் நோயாக மாறும்.
‘வெயில் வரும் போது கூரையைப் பழுது பார்த்து விடு’ என்பார்கள் நம் முன்னோர்கள். ‘இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லையென்று’ எச்சரிக்கை தான் அது. ஒரு நிமிட தாமதத்தால் தோற்றுப்போவதை விட, ஒரு மணி நேரம் முன்னால் போவது அவமானமாகாது!
பயனில்லாமல் விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும், தோல்விக்கு நீங்கள் தரும், உணவு என்று மறந்துவிடாதீர்கள். காலில் கட்டிய விலங்காக நேரத்தை இனி எண்ணாமல், அதை கையில் எடுத்து வெற்றிக்கான ஆயுதமாக மாற்றுங்கள். இனி காலத்தை காலண்டரில் கிழிக்காதீர்கள்! ஒவ்வொரு நொடியும் விழிப்போடு செயல்படுவோம்!
ஒன்றே செய்வோம், அதை நன்றே செய்வோம்.. அதை இன்று செய்வோம்..
அதையும் இப்பொழுது செய்வோம்!
இந்த பதிவை வீடியோவாக பார்க்க!