பயந்தவனுக்கு வாழ்க்கை தகராறு.. துணிந்தவன் வாழ்க்கை வரலாறு..
ஒருவன் வாழ்க்கையில் எதற்கும் துணிந்தவனாக திகழும் போது அவன் வாழ்க்கையில் வரலாறை படைக்க முடியும். அதே பயந்தவனின் வாழ்க்கை தகராறில் தான் முடியும். எனவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நீங்கள் அச்சப்படக் கூடாது.
அச்சம் இல்லாமல் நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடக்கலாம். அதுவும் எளிமையாக உங்களது இலக்குகளை அடைய இது உங்களுக்கு அவசியம் உதவி செய்யும். அதற்காக நீங்கள் கோபத்தை சற்று கட்டுப்படுத்தலாம் அல்லது கோபப்படாமல் இருப்பதன் மூலம் சிரமம் இல்லாமல் உங்கள் காய்களை நகர்த்தலாம்.
அவசியம் இல்லாத சமயங்களில் கூட நீங்கள் காட்டும் கோபமானது, உங்கள் மீது இருக்கும் மதிப்பை இழக்க செய்யும். எனவே கோபப்படுவதை தவிர்த்து விடுங்கள், அதிக அளவு கோபத்தை வெளிப்படுத்திய துரியோதனனின் நிலை கடைசியில் என்ன ஆனது என்பதை நினைத்து பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு கோபம் ஏற்படாது.
உங்களுக்கு ஏற்படும் சோம்பேறித்தனத்தால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் பெரிதளவு வெற்றியை தராது. வெற்றியைப் பெற வேண்டும் என்றால் கடினமான உழைப்போடு சுறுசுறுப்பான நிலையை நீங்கள் கை கொள்வது அவசியமாகும்.
சிந்திக்காமல் நீங்கள் பேசக்கூடிய ஒரு சிறு தவறான வார்த்தை உங்களை தரம் தாழ்த்தி விடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே எதைப் பேசுவதற்கு முன்பும், நீங்கள் சிந்தித்து பேசினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை பெறுவதோடு நல்ல மதிப்பையும் மற்றவர்கள் முன் பெற முடியும்.
வட்டம் போட்டு வாழும் வாழ்க்கை தவறில்லை. ஆனால் அந்த வட்டமே வாழ்க்கை என்று எண்ணுவது தான் தவறு. எனவே உங்கள் வாழ்க்கையில் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். அந்த திட்டத்தை செயல்படுத்த உத்வேகத்தோடு செயல்படுவது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் பிறந்தவர்கள் தினமும் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கற்றவர் என்று யாருமே இல்லை, வளையக்கூடிய தன்மை நமது நாக்குக்கு இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பு இழுத்து பலர் மத்தியிலும் உங்களை சிக்க வைக்க கூடிய நாக்கினை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
உங்களது குணமானது உங்களது வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும். எதற்கும் அஞ்சாமல் நீங்கள் எடுத்த பணியை சீரும் சிறப்புமாக செய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த முயற்சியை நீங்கள் செய்வதற்கு கால நேரம் பார்க்க வேண்டாம். எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் முயற்சி செய்தால் போதாது. உங்களுக்குத் தேவையான நேரத்தை நீங்களே உருவாக்க திட்டமிட்டால் வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிட்டும்.
எதைப் பற்றியும் யார் என்ன சொன்னாலும், அவற்றைப் பற்றி எல்லாம் உங்கள் செவிகளில் போட்டுக் கொள்ளாமல், வீறு நடை போட்டு நீங்கள் நடந்தால் வெற்றிகள் வந்து சேரும். இதனைத் தான் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வந்து விழவேண்டும் என்ற பாடல் வரிகள் உறுதிப்படுத்துகிறது.
சிங்கம் போல உறுதியோடும் அஞ்சா நெஞ்சோடும், நீ எதற்கும் அஞ்சாமல் இருந்தாலே போதும். உனக்குள் கட்டாயம் ஒரு கனல் உருவாகும்.இதைத்தான் பாரதி அக்னிக் குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கொரு பொந்தினில் வைத்தேன் என்று கூறியிருக்கிறார். அந்த அக்னி குஞ்சு என்ற வார்த்தை ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் உள்ளது. இதை உணர்ந்து செயல்பட்டால் போதும்.