மன அழுத்தத்தின் முடிவு தற்கொலையா? – விரட்டுங்கள் உங்கள் மன அழுத்தத்தை..
இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளக் கூடிய முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலையை உதாரணமாக கூறலாம்.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மீராவின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். என்ன இருந்து என்ன பயன்?.. என்று கேட்கக் கூடிய விதத்தில் எல்லாம் இருந்தும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட இவரின் நிலைமையை நினைத்து என்ன கூறுவது என்று தெரியாமல் அனைவரும் வருந்தினார்கள்.
முன்பு எல்லாம் மனதில் ஏற்படும் இந்த அழுத்தங்களை தீர்த்துக் கொள்ள, தங்களுடைய கஷ்டங்களை வெளியே சொல்லி அழ கூடிய நட்பு வட்டம் இருந்தது .மேலும் அப்படி அழுது சொல்வதின் மூலம் அவர்களின் பாரம் குறையும்.
ஆனால் இன்றோ நாகரீகத்தின் காரணத்தினால், ஒருவரோடு ஒருவர் பேசக்கூடிய கால அளவு சுருங்கி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினி போன்ற சாதனங்களோடு பொழுதை தள்ளுகின்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்துவிட்டது.
மன அழுத்தத்தை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். அவை தற்காலிகமான மன அழுத்தம் மற்றும் ஓசிடி மன அழுத்தம் ஆகும்.
இதில் தற்காலிக மன அழுத்தத்திற்கு உதாரணமாக தேர்வு சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தை கூறலாம். அது போல ஒருவர் உங்களை ஏமாற்றி விட்டால் அது உங்களுக்கு ஓர் தற்காலிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பிறகு அவை தானாகவே சரியாகிவிடும்.
மனதை ஆட்டி படைக்கக்கூடிய ஒரு வகையான நரம்பியல் குறைபாட்டை ஓசிடி மன அழுத்தம் என்று கூறுகிறார்கள். இதற்கு மூளையில் இருக்கும் செரட்டோனின் எனும் வேதிப்பொருள் குறையால் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மன அழுத்தம் உடையவர்கள் அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க பல வழிகளை கையாளலாம். அந்த வகையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிம்மதியாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
அத்தோடு ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், இசையை கேட்பது போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தை விரைவாக குறைக்க முடியும்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்ரினலின் சுரப்பு அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். எளிதில் எரிச்சல் அடைதல், கோபம் கொள்ளுதல், எதிலும் கவனத்தை செலுத்த முடியாத நிலைமை தலைவலி, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் எற்படும்.
இந்த மன அழுத்தத்தை குறைக்க கூடிய உணவுகளை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக மெக்னீசியம் நிறைந்த பொருட்கள், கொழுப்பு சத்துள்ள ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், விதைகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மன அழுத்தம் குறையும். குறிப்பாக பாதாம், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள், ஆளி விதை, அக்ரூட், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கவலை என்பது ஏற்படக்கூடிய ஒன்றுதான். அந்த கவலையிலிருந்து வெளிவருவதற்கு என்ன வழி என்பதை யோசித்து முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த மன அழுத்தம் நம்மை அழித்துக் கொல்லும்.மேலும் மன அழுத்தத்திற்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.