டபுள் சதத்தை தொட்டதா.. தக்காளி?- எதனால் இந்த விலை ஏற்றம்..
அவனுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்று காமெடியாக பேசி வந்தா.. இன்று தக்காளி சட்னிக்கு திண்டாட கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
தங்கத்தைக் கூட வாங்கிவிடலாம் தக்காளியை வாங்க முடியுமா? என்று தெரியாமல் பரிதவித்து வரும் மக்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தக்காளி சாதம் கிடைக்காதது எண்ணி வருத்தத்திலும் இருக்கிறார்கள்.
இந்த தக்காளியின் விலை ஏற்றம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 20க்கு வைக்கப்பட்ட தக்காளி இன்று 200 கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு என்ன காரணம்.
சென்னையில் மிகப் பெரிய சந்தையாக இருக்கும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1500 டன் அளவு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதனுடைய வரத்து இப்போது வெறும் 400 டன்னாக உள்ளதால் தான் இந்த விலை ஏற்றமா.
கடந்த சில வாரங்களாகவே 150 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ஜூலை மாத கடைசி நாளான 31ஆம் தேதியில் 190 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னையை பொருத்தவரை தக்காளியை கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் கொண்டு வருவார்கள். நாளுக்கு நாள் தக்காளி தேவை அதிகரித்து இருப்பதாலும் அதன் உற்பத்தி, வரத்து இரண்டும் குறைந்து உள்ளதால் இந்த விலை ஏற்றம் இருக்கலாம்.
பொதுவாகவே இந்த தக்காளியானது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை பயிரிடப்படும். இந்த பட்டத்தில் பயிரிடப்பட்ட தக்காளியில் பூக்கள் சரியாக நிற்காததன் காரணத்தால் மிகப்பெரிய இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளார்கள்.
உரிய பருவத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் சற்று காலம் தாழ்த்தி பெய்ததன் காரணத்தாலும் தக்காளி விளைச்சல் குறைந்து விட்டது. இதனை அடுத்து ராக்கெட் வேகத்தில் தக்காளியின் விலை உயர்ந்து விட்டது.
நம் மாநிலத்தில் தான் இப்படி என்றால் தக்காளியை உற்பத்தி செய்யும் அனைத்து இடங்களிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே தான் ஆப்பிளை விட அதிக விலையில் தக்காளி விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகமாகலாம் என தெரிய வந்துள்ளது.
தக்காளி விளைச்சல் அதிகரித்து எப்போது இதன் விலை குறையும் என்று பெரும்பாலான இல்லத்தரசிகள் காத்திருக்கிறார்கள்.