இந்து மதத்தின் கடைசி வேதம் அதர்வண வேதம் ..! – ஓர் அலசல்..!
இந்து மதத்தை பொறுத்தவரை நான்கு வேதங்கள் உள்ளது. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். கடைசியாக வரும் அதர்வண வேதத்தை பற்றி பலவிதமான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தர்வ என்றால் பயம், அதர்வம் என்றால் பயமற்ற தன்மையை தருவது என்று பொருள். இந்த சொல்லே திரிந்து அதர்வணம் என்று மாறியது. அதாவது தீய சக்திகளில் இருந்து உங்களை காக்கக்கூடிய அற்புத சக்தி கொண்ட தன்மை இந்த அதர்வண வேதத்தில் உள்ளது.
குறிப்பாக கடவுள் கிருஷ்ணர் கூறிய பகவத் கீதையில் முதல் மூன்று விவரங்கள் பற்றியே தெளிவான கருத்துக்கள் கூறப்பட்டுள்ள நிலையில் அதர்வண வேதத்தைப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. எனவே இந்த வேதமானது மகாபாரத காலத்திற்கு பின்னால் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
அதர்வண வேதத்தில் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களும், துயரங்களும், நோய்களும் தீருவதற்கான குறிப்புகள் நிறைய கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளது. இந்த பாடல்கள் மனிதர்களை நோயிலிருந்து காக்க கூடிய சக்தி படைத்தது என்று கூறியிருக்கிறார்கள்.
விவசாயத் துறையில் விதை விதைக்கும் போது பயிர்களில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல்களை காக்கவும், விளைச்சலை வீட்டுக்கு சிறப்பான முறையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக சில பாடல்கள் உள்ளது. இந்த பாடல்களை பாடுவதின் மூலம் விவசாயம் செழிப்பாவதோடு பூச்சிகளின் தொல்லை குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தீய சக்திகளால் மனிதன் சிரமப்படும் போது அவற்றை தடுக்க என்னென்ன செய்யலாம் போன்ற விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தான் அதர்வன வேதம் காளி வழிபாடு, பிரத்தியங்கரா போன்ற வழிபாடுகளை மனிதர்களுக்கு எடுத்துக் கூறியது.
இந்த வேதத்தை பொறுத்தவரை மனிதர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவு விஷயங்களும் பொதிந்துள்ளது என்று கூறலாம். இது பற்றி புரியாதவர்கள் தான் இந்த வேதத்தை மாந்திரீகம் செய்வதற்கு பயன்படக்கூடிய வேதமாக மிகைப்படுத்தி இருக்கிறார்கள்.