“பட்டையை கிளப்பும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு..!” – வரலாற்றை புரட்டிப் போடுமா?
மனித இனத்தின் நாகரீகத்தை அறிந்து கொள்ள வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இனத்தின் வரலாறும், அவர்களின் சிறப்பை எடுத்துக் கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் நடந்து வந்த பாதையை நமக்கு திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்கும்.
அந்த வகையில் இன்று நாடெங்கிலும் பல வகையான வரலாற்று ஆய்வுகளும், தொல்லியல் தேடல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்குடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகளைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனை கோட்டையில் இருக்கக்கூடிய பகுதிகளில் வரலாற்று ஆய்வாளர்கள் அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த பணியில் வட்ட வடிவிலான சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவர்கள் ஆனது சங்க காலத்தை சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை மற்றும் கோட்டை கொத்தளம் போன்று இருப்பதால் வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பொற்பனைக்கோட்டையின் மையப் பகுதியில் கடந்த மே மாதம் முதல் இன்று வரை அகழ்வாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் வட்ட வடிவமான சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. பெரும்பான்மையான கட்டுமானங்கள் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதாலும், ஒரு சில கட்டுப்பாடு மட்டுமே சரியான முறையில் கட்டப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுமானம் ஆனது 15 அடி நீளம் மற்றும் அகலத்தில் 13 அடி கொண்டுள்ளது. மேலும் கோட்டையின் உட்புறமும் வெளிப்புறமும் அகழிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மூக்குத்தி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது என அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள், நாகரிக வளர்ச்சியில் முன்னேறிய மக்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த பொருட்கள் உறுதி செய்துள்ளது.
எனவே மேலும் ஆய்வுகளை முடுக்கிவிட்டு இருக்கக்கூடிய ஆய்வாளர்கள், மேலும் பல அறிய பொருட்களை கண்டுபிடிப்பதோடு அவற்றைச் சார்ந்த உண்மைகளை விரைவில் தெரிவிப்பார்கள் என நம்பலாம்.