பிட்புல் நாய் வளர்ப்பது பாதுகாப்பானதா? – நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அபாயகரமான உண்மைகள்!
முதன் முதலில் ஆதி மனிதன் நாய்களை பழக்கப்படுத்தியதின் முக்கிய நோக்கம் வேட்டையாடுவதற்காகவே.
பின்பு நாள் அடைவில் வீட்டுக்குள்ளே இந்த நாய்களை அடைத்து வைத்து தங்களது செல்லப்பிராணியாக வளர்த்து அந்த நாயின் வேட்டை குணங்களை மழுங்கடித்து விட்டான்.
என்ன தான் மழுங்கடித்து விட்டாலும் அந்த நாய்களுக்கான மூர்க்கத்தனமான வேட்டை குணம் அந்நியன் விக்ரம் போல் சில சமயங்களில் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது.
இந்திய நாட்டு நாய்கள்
இந்தியர்களை பொறுத்தவரை ராஜபாளையம், சிப்பிப்பாறை, கொம்பை போன்ற நாட்டு இன நாய்களை அதிக அளவில் வளர்த்து வந்தனர்.
இந்த நாட்டு நாய்கள் தங்களது எஜமானர்களுக்கு பாதுகாவலனாகவும், நல்ல நண்பனாகவும் விளங்கியது.
வெளிநாட்டு நாய்களின் வருகை
காலம் செல்ல செல்ல 1990 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு மனிதனுக்கு வெளிநாட்டு இன நாய்களின் மீது ஒரு வித ஈர்ப்பு வந்தது.
அதன் விளைவாக பலவகை வெளிநாட்டு இன நாய்கள் இந்திய செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியது.
குறிப்பாக அல்சேஷன், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்ஹெர்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள் இங்கு நம் நாட்டு இன நாய்களின் ஆடம்பர வாழ்க்கையை தட்டி பரித்து விட்டன என்றே சொல்லலாம்.
பிட்புல் நாய்களின் அறிமுகம்
21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானவர் தான் இந்த பிட்புல் (Pitbull) இன நாய்கள்.
“என்னிடம் சண்டைக்கு வா நாலு கடி கடிச்சிட்டு விட்டுவிடுகிறேன்” என்று நம்மிடம் வம்பிழுப்பது போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கும் நாய்க்கு பெயர்தான் பிட்புல். இந்த வகை நாய்கள் பிரிட்டனை தாயகமாக கொண்டதாகும்.
பிட்புல்லின் உடல் அமைப்பு
பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருக்கும் இந்த நாயானது வலுவான தாடையையும், திடமான தசைகளையும், கூர்மையான கண்களை கொண்டு பிறரை அச்சுறுத்துகிறது.
இந்த நாயானது யாரேனும் ஒருவரை கடித்து விட்டால் அதன் வாயிலிருந்து கடிபட்டவரை விடுவிக்க கிட்டத்தட்ட ஐந்து பேராவது தேவையாம். அந்த அளவிற்கு இதன் கடி மிகவும் வலுவானது.
பிட்புல் நாய்களின் பயன்பாடு
என்ன தான் இந்த நாயை செல்லப்பிராணி என்று நாம் அழைத்தாலும் அடிப்படையில் இந்த பிட்புல் நாய்கள் சண்டை இடுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.
அதனாலே தங்களுக்கு பாடிகார்ட்-ஆக இந்த ஆக்ரோஷமான பிட்புல் நாய்களை பலர் தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் திருடர்கள் மற்றும் ரவுடிகள் இந்த நாய்களை தங்களது பாதுகாவலனாக வளர்க்கின்றனர்.
அபாயகரமான சம்பவங்கள்
என்ன தான் இந்த பிட்புல் நாய்களை வளர்ப்பவர்கள் “புச்சி குட்டி, செல்லக்குட்டி, ஜாங்கிரி, பூங்கிரி” என்று செல்லமாக வளர்த்தாலும், சில சமயங்களில் தன்னை வளர்த்த எஜமானர்களையே தாக்கக்கூடிய சம்பவங்களும் அவ்வப்பொழுது அரங்கேறிய வண்ணம்தான் உள்ளது.
சுஷிலா திரிபாதி சம்பவம்
ஒரு சில தினங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற ஆசிரியரான சுஷிலா திரிபாதி என்ற பாட்டியை 12 இடங்களில் மிகவும் கொடூரமாக கடித்து கொன்றுள்ளது இந்த பிட்புல் நாய்.
“வளர்த்த கெடா மார்பில் பாயுது” என்ற பழமொழிக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
உலக நாடுகளின் நிலைப்பாடு
அவ்வப்பொழுது அந்நியனாக மாறி தன் எஜமானர்களையே கடிக்கும் குணத்தை இந்த நாய்கள் பெற்றுள்ளதால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஆஸ்திரெலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் இந்த பிட்புல் வகை நாயை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால் இந்தியாவில் பிட்புல் நாயால் இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்த போதிலும் இந்த நாய் வளர்க்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இதனாலே பிட்புல் நாயின் ஆபத்தை உணராமல் பலர் இந்தியாவில் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்புல் நாய்களின் குணாதிசயங்கள்
- பிட்புல் நாய்கள் பொதுவாக ஒருவருக்கு மட்டுமே கட்டுப்படக்கூடியது
- ஒரு புறம் அன்பாகவும், மறுபுறம் மிகவும் மூர்க்கமாகவும் நடந்துக்கொள்ள கூடியது
- பிட்புல் நாயை வளர்க்கவே பிரத்யேக பயிற்சி தேவை
- அதை எப்படி வளர்க்கிறோமொ அதைப் பொறுத்து அதன் குண நலன்கள் மாறுபடும்
காலநிலை மற்றும் உணவு பிரச்சினைகள்
எல்லாவற்றிற்கு மேலாக மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ணமும், உணவும்தான் பிட்புல் வகை நாய்களுக்கு உகந்தவை.
இந்திய சீதோஷ்ணமும், உணவு வகைகளும் ஒத்துக்கொள்ளாததால் சில நேரங்களில் அது மூர்க்கமாக மாறிவிடுகிறது.
மேலும் அவற்றின் சண்டை குணங்கள் மழுங்கடிக்கப்படுவதால் அவ்வப்பொழுது ஆக்ரோஷமாக மாறி மனிதர்களை கடிக்கிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் இந்தியாவில் பிட்புல் நாய்களை வளர்க்க வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
இருந்தும் “எவன் கேட்கப்போறான் கடிவாங்கனா தன்னாலே அடங்கிடுவான்” என்ற நிலையே தொடர்கிறது.