கால பைரவராக சிவன் அவதாரம் எடுக்க என்ன காரணம்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..
ஆதியும், அந்தமும் இல்லாத கடவுளாக ஆதி சிவன் இருக்கிறார். உலகம் தோன்றிய நாள் முதல் இந்துக்களின் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய இந்த சிவபெருமான் 64 அவதாரங்களை எடுத்து இருக்கிறார். அதில் ஒன்று தான் கால பைரவர் அவதாரம்.
சக்தி புராணத்தின் படி ஈசனின் மனைவியான தாட்சாயினி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானம் படுத்தியதின் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இதனை அடுத்து கடுமையான சோகத்திற்கு உள்ளான சிவபெருமான் தாட்சாயினியின் உடலை கையில் ஏந்தியவாறு மனநிலை மாறி அங்கும், இங்குமாக திரிந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட மகாவிஷ்ணு, சிவனின் சோகத்தை நீக்கி சாந்த சொரூபமாக மாற்ற எண்ணி தனது சக்கராயுதத்தைக் கொண்டு தாட்சாயிணியின் உடலை பல துண்டுகளாக அறுக்கும் படி செய்தார்.
அறுக்க பட்ட உடல் துண்டுகள் முழுவதும் பாரத தேசம் எங்கும் வீழ்ந்து சக்தி பீடங்களாக உருவானது. இந்த சக்தி பீடங்கள் முழுவதும் சிவபெருமானே பைரவராக இருந்து காவல் புரிந்து வருவதாக இன்று வரை நம்பிக்கை நிலவுகிறது.
இது இப்படி இருக்க இன்னொரு கதையும் கூறப்படுகிறது. அது என்னவெனில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்ற ஒரு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்ட பொழுது கால பைரவராக மாறிய சிவபெருமான் தன் ஆதியையும், அந்தத்தையும் யார் பார்க்கிறார்களோ? அவர்களே உயர்ந்தவர்கள் என்று கூற, இருவரும் சிவபெருமானின் ஆதியையும், அந்தத்தையும் கண்டுபிடிக்க செல்கிறார்கள்.
அந்த வகையில் விஷ்ணு காலபைரவரின் ஆதி மற்றும் அந்தத்தை பார்க்க முடியாமல் உண்மையை ஒப்புக்கொள்கிறார். எனினும் பிரம்மா தான் கால பைரவரின் தலையை பார்த்ததாக பொய் கூறியதை அடுத்து கடும் சினம் கொண்ட சிவபெருமான் ஆகிய கால பைரவர் பிரம்மனின் நான்கு தலைகளில் ஒன்றை கொய்து விடுகிறார்.
எனவே விஷ்ணு மற்றும் பிரம்மன் இடையே ஏற்பட்ட தகராறு தீர்த்து வைக்க எடுத்த அவதாரமாகவும் கால பைரவ அவதாரத்தை கூறுகிறார்கள்.
காசி மாநகரில் காவல் தெய்வமாக இருக்கும் இந்த கால பைரவர் நவகிரகங்களுக்கெல்லாம் முக்கிய அதிபதியாக விளங்குவதால் இவரை வழிபட்டாலே அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சனி பகவானுக்கு குருவாக திகழக்கூடிய இந்த கால பைரவரை சனிக்கிழமை அன்று வழிபடும்போது சனி தோஷம் நீங்குவதோடு தீய சக்திகளின் தாக்குதல்களில் இருந்து உங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கால பைரவருக்கு முக்கியமான தினமாக தருவது கருதப்படுவது தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த திதியில் அதுவும் செவ்வாய்க்கிழமை வருகின்ற திதியில் இவரை வழிபடும்போது சகலதோஷமும் நீங்குவதோடு நவகிரக தோஷங்கள் எளிதில் நீங்கும்.