“ஆடியில் இரண்டு பௌர்ணமிகள்..!” – இன்றைய (01.08.23) பௌர்ணமியே பூசைக்கு உகந்தது..
ஆடியில் இரண்டு பௌர்ணமிகள்.. இன்றைய பௌர்ணமியே பூசைக்கு உகந்தது..
ஆடி என்றாலே அனைத்து விதமான பண்டிகைகளையும் அழைத்து வரக்கூடிய மாதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது மட்டும் அல்லாமல் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி போன்றவை சிறப்பாக வீடுகளிலும், கோவில்களிலும் கொண்டாடப்படுகின்ற தினங்களாக இருக்கும்.
அந்த வகையில் ஏற்கனவே இரண்டு அமாவாசை வந்த நிலையில் தற்போது இரண்டு பௌர்ணமிகள் ஆடியில் வர உள்ளது. இதில் இன்றைய பௌர்ணமியை தான் எடுத்துக்கொண்டு பூஜை செய்வது நன்மையை கொடுக்கும் எனக் கூறலாம்.
எனவே இன்று ஆகஸ்ட் 1, 2023 இல் உங்கள் குடும்பங்களை மேலும் சிறப்பானதாக மாற்ற விரதம் இருந்து சத்திய நாராயணனை வழிபடுவதை பௌர்ணமி தினங்களில் வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. எனவே ஆகஸ்டு முப்பதாம் தேதி வருகின்ற பௌர்ணமியை நீங்கள் ஆவணி மாத பௌர்ணமியாகத்தான் கருத வேண்டும்.
பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதோடு திருவண்ணாமலை இருக்கும் சிவனை வழிபட்டு கிரிவலம் செல்வதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பதால் இன்றைய தினம் நீங்கள் கிரிவலம் செல்வது மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை மற்றும் இரண்டு பௌர்ணமி வருகின்ற நேரத்தில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் பெரும்பாலான மக்களிடையே உள்ளது.
மேலும் இப்படி இரண்டு பௌர்ணமிகள் வருவதை மலமாதம் என்றும் இரண்டு அமாவாசை வருவதை விஷமாதம் என்று நமது முன்னோர்கள் அழைத்து இருக்கிறார்கள். எனவே இப்படி வரும் மாதங்களில் சுபகாரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.
பௌர்ணமி தினத்தன்று சந்திர பகவானை வழிபடுவதன் மூலம் சந்திரனல் ஏற்பட்டு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று முன்னோர்கள் கூறியிருப்பதோடு, மாலை நேரத்தில் ஆறு மணிக்கு பிறகு பால் பாயசம் செய்து சந்திரனை வழிபாடு செய்வதின் மூலம் மனக்கவலை நீங்கும் எனக் கூறியிருக்கிறார்கள்.
முதல் பௌர்ணமியான இன்று தான் ஆடித்தபசு கொண்டாடப்படுகிறது. மேலும் சங்கரன்கோவிலில் இருக்கக்கூடிய கோமதி அம்மன் எப்போதும் சிவனை விட்டு நீங்காமல் இருக்க கூடிய வரத்தைப் பெற்றாள்.
அதை போலவே சிவன் பாதி, விஷ்ணு பாதியாக சங்கர நாராயணர் கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். எனவே இன்று உங்கள் வீட்டில் மறவாமல் பால் பாயாசம் செய்து மாலை நேரத்தில் நிலவுக்கு நெய்வேத்தியம் செய்து சந்திரனின் பூரண அருளைப் பெறுங்கள்.
இதன் மூலம் உங்கள் வீட்டில் மேன்மை ஏற்படும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற பௌர்ணமி நாட்களில் சந்திரனை வழிபடுவதின் மூலம் மனநிலை கோளாறுகள் நீங்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
குளிர்ச்சியை தரக்கூடிய சந்திர பகவானை வழிபட்டு சகல சௌபாக்கியமும் பெற இன்று மிகவும் சிறப்பான நாள் ஏனென்றால் செவ்வாய்க்கிழமை ஏற்படுகின்ற பௌர்ணமியானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.