சீதை மகன் லவன் உண்மையிலேயே சீதையின் மகனா? – அட.. லவன் தான் கருப்ப சாமியா?.. இது என்னடா புதுக்கதை..
இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இருக்கக்கூடிய கோயில்களில் கருப்பசாமி கட்டாயம் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, ஆஜானுபகுவாக வெள்ளைக் குதிரையில் மிரட்டும் கண்களோடு காட்சியளிப்பார்.
காவல் தெய்வமாக விளங்குகின்ற இந்த கருப்பசாமியின் பிறப்பு பற்றியும், வரலாறு பற்றியும் புதைந்திருக்கும் உண்மைகள் பற்றி இந்த கட்டுரை உங்களுக்கு விரிவாக எடுத்துக் கூறும்.
அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சீதைக்கு பிறந்தது எத்தனை குழந்தைகள்? உண்மையில் சீதையின் குழந்தை யார்? இரண்டாவது குழந்தை எப்படி பிறந்தது? என்பது போன்ற விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். இந்தியாவைப் பொறுத்தவரை இதிகாசங்கள் இரண்டு. இவை ராமாயணம் மற்றும் மகாபாரதம். இன்றைய மனிதர்களுக்கு தேவையான அனைத்து வகையான விஷயங்களையும், மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நல் ஒழுக்கங்களை சீரும் சிறப்புமாக இவை எடுத்துக் கூறுகிறது.
இதில் ராமாயண இதிகாசத்தை பொருத்தவரை வால்மீகி ராமாயணம், கம்பர் எழுதிய கம்பராமாயணம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்.
அதுபோலவே இந்த இதிகாச காவியமான இராமாயணம் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகைகளில், இன்றும் கதைகளாக உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தாய்லாந்து கூறப்படும் ராமாயணத்தில் சீதைக்கு ஒரு மகன் என்ற செய்தி மட்டுமே உள்ளது.
நாம் படித்த வால்மீகி ராமாயணத்தில் சீதை கர்ப்பிணியாக இருந்தபோது அவளுக்கு இரட்டைகளான லவன் மற்றும் குசன் பிறந்தார்கள் என்று படித்திருப்போம்.
அது மட்டுமல்லாமல் சீதா தேவியை ஜனகனின் மகளாக படித்த நாம், அதே இலங்கையில் சொல்லப்பட்டிருக்கும் ராமாயணத்தில் சீதா தேவியை ராவணனின் மகளாக கூறி இருப்பார்கள்.
அப்படி இடத்துக்கு இடம் ராமாயண காவியத்தில் சில அதிரடி மாற்றங்களோடு இந்த கதை இருக்கும். அந்த வகையில் சீதைக்கு பிறந்த குசனின் பிறப்பு பற்றி இனி விரிவாக கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஏகபத்தினி விரதனாக இருந்த ராமருக்கு ஒரு வில், ஒரு மனைவி தான் இந்த கருத்தை நிலை நிறுத்திய ராமாயணம். ராமனை ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக சித்தரித்தது. எனவே தான் ராமனைப் போல கணவன் அமைய வேண்டும் என்று பல பெண்களும் விருப்பப்படுகிறார்கள்.
எனினும் நாட்டு மக்களின் ஓருவன் தனது மனைவியை தவறாக கூறியதன் காரணத்தால், மனைவி கர்ப்பபதியாக இருந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அவளைக் காட்டுக்கு அனுப்பி வைத்த கதை எல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தன் மனைவி மீது தீராத காதலும், அன்பும், பாசமும் கொண்டு இருத்த ராமர் இப்படி சீதைக்கு துரோகம் செய்வார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
எனினும் விதி யாரை விட்டது. கடவுளாக இருந்து அவதாரம் எடுத்து இருந்தாலும் மனிதப் பிறவியில் பட வேண்டிய கஷ்டத்தை கட்டாயம் பட்டே ஆக வேண்டும். இவர்களுக்கு விதி, விலக்கு இல்லை என்பதற்கு இந்தக் கதையை கூட நாம் உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் கர்ப்பிணியான சீதாதேவி கானகத்தில் வால்மீகி முனிவரின் குரு குலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அன்னை சீதாபிராட்டி கானகத்தில் காலத்தை கழித்து வந்த போதும் அண்ணல் ராமபிரானை நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நினைத்தபடியே வாழ்ந்திருக்கிறார்.
தனது வயிற்றில் ராமனின் வாரிசை சுமந்த சீதாதேவி வால்மீகி ஆசிரமத்தில் இருக்கும் போது இரட்டை பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறாள். இதைத்தான் நீங்கள் ராமாயணத்தில் படித்தும் இருப்பீர்கள்.. கதையாக கேட்டும் இருப்பீர்கள்.
எனினும் குசன் என்ற ஒரு ஆண்மகனை மட்டும் தான் சீதாதேவி ஈன்றதாகவும் லவன் என்ற மகன் அவருக்கு பிறந்த பிள்ளையின் இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு என நான் நினைக்கிறேன்.
அது சரி அப்படி என்றால் லவன் யாருடைய மகன்.. எப்படி பிறந்தார்? என்பது போன்ற பலவிதமான வினாக்கள் உங்களுக்குள் ஏற்படும். அந்த வினாவுக்கான விடை பற்றி இனி படிக்கலாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. எனினும் செவி வழியாக இந்த கதை சொல்லப்படுகிறது. அது என்ன என பார்க்கலாமா..
வால்மீகி முனிவரின் குருகுலத்தில் குசனைப் பெற்றெடுத்த சீதா தேவி. சரி.. தனது முதல் பிள்ளைக்கு குசனுக்கு, குசன் என்ற பெயர் எப்படி வந்தது என்று முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முதல் பிள்ளையான குசன் பிறந்த பொழுது அந்தப் பிள்ளையை “குஸ” என்ற புனித பொருளால், அதாவது தர்ப்பைப் புல்லால் நீர் தெளித்ததின் காரணத்தால் தான் சீதா தேவியின் முதல் ஆண் குழந்தைக்கு “குசன்” என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் குசன் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீதையின் மகன் வளர்ந்து வந்தான். அந்த சமயத்தில் ஒரு நாள் சீதாதேவி அருகில் இருந்த குளத்தில் நீர் எடுக்க செல்ல வேண்டி இருந்தது.
அந்த நேரத்தில் குழந்தை குசன் தொட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்ததின் காரணத்தால் தியானத்தில் இருந்த வால்மீகி இடம் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி சீதை கூறினாள்.
எனினும் முனிவரின் ஆழ்ந்த தியானத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி தனது குழந்தையை எடுத்துக்கொண்டு ஆசிரமத்தில் இருந்து நீர்நிலை இருக்கும் இடத்தை நோக்கி சீதை சென்று விட்டாள்.
இதனை அடுத்து தியானத்தை விடுத்து கண் விழித்த வால்மீகி முனிவர் தொட்டிலை பார்க்கும் போது அங்கு குழந்தை இல்லை என்ற விஷயத்தை அறிந்து கொண்டு பதறினார்.
மேலும் ஆசிரமம் முழுவதும் தேடியும் குசன் கிடைக்காத காரணத்தால் சீதாதேவி வந்தால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார். ஏற்கனவே கணவனைத் பிரிந்து மீளா துயரில் இருக்கும் சீதை தற்போது குழந்தையை காணவில்லை என்றால் அவள் மனநிலை என்னவாகும் என்று பலவாறு யோசித்தார் வால்மீகி முனிவர். இதனை அடுத்து அவர் கடைசியாக ஒரு முடிவினை எடுத்தார்.
இதனை அடுத்து வால்மீகி முனிவர் தன்னுடைய அற்புதமான மந்திர சக்தியை பயன்படுத்தி குசனைப் போலவே ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிரும் கொடுத்து விட்டார்.
இந்நிலையில் சீதை ஆசிரமத்திற்கு திரும்பி தன் குழந்தையோடும், நீரோடும் வருவதைப் பார்த்த வால்மீகி முனிவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு தான் செய்த தவறு புரிந்தது, அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்து வருந்தினார்.
வருத்தத்தில் இருக்கும் முனிவரைப் பார்த்து அதன் காரணத்தை சீதா கேட்க… முனிவர் வால்மீகி சீதாதேவி இடம் நடந்த விவரங்களை கூறி, இந்த குழந்தை கம்பளியால் உருவானதால் இவனுக்கு “லவன்” என்ற பெயரை வைத்து உன் இரண்டாவது பிள்ளையாக வளர்க்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
இதன் பிறகு சீதா தேவியும் வால்மீகி முனிவரின் வேண்டுகோளை ஏற்று லவனை தனது இரண்டாவது மகனாக வளர்த்து வந்தார்.
வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் சீரும், சிறப்புமாக வளர்ந்தார்கள். அவர்கள் இருவருக்குமே தக்க பருவத்தில் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை கற்பித்ததோடு மட்டுமல்லாமல் ராமனின் கதையையும் கற்பித்து பாடலாக பாட வைத்தார்.
பின்னர் சகோதரர்கள் இருவரும் இராமாயணத்தை பாடலாக பல பகுதிகளில் பாடி நல்ல பெயரை பெற்றார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் தந்தை ராமன் என்று தெரியாமலேயே ராமனின் அரண்மனைக்குச் சென்று அங்கும் இராமாயணத்தை பாடி ராமனின் மனதை குளிர்வித்தார்கள்.
இதனை அடுத்து இந்த இரண்டு குழந்தைகளுமே தன்னுடைய குழந்தைகள் என்பதை அறிந்து கொண்ட ராமர், மீண்டும் பொதுமக்களில் ஒருவர் கூறிய கருத்தைக் கேட்டு இரண்டு பிள்ளைகளில் எந்த பிள்ளை தன் பிள்ளை என்று சீதையிடம் கேட்டபோது தான் பிரச்சனை ஆரம்பித்தது.
அந்த நிமிடம் வரை இருவரையுமே தன் இமைகளைப் போல பாதுகாத்து வந்த சீதை இந்த துரதிஷ்டமான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தயங்கினாள். எனினும் வேறு வழி இல்லாமல் நடந்ததை கூறினாள்.
இதனை அடுத்து குசன் தான் சீதா தேவியின் உண்மையான மகன் என்பதை தெரிந்து கொண்ட லவன் மிகவும் துயரம் அடைந்தான். அது மட்டுமல்லாமல் தன்னால் தனது வளர்ப்புத் தாய்க்கு எந்த விதமான சங்கடமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
பின்னர் தன் அண்ணனான குசனிடம் இனி நாட்டை அப்பாவுக்கு பிறகு நீ ஆள்வதோடு அம்மாவையும் பார்த்துக் கொள். நான் விடைபெறுகிறேன். இனி நான் இங்கு இருப்பது அவ்வளவு நல்லதல்ல என கூறினான்.
மேலும் தன்மேல் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்ப்பதற்காக தனது வளர்ப்பு தாய் பத்தினி என்பதை மீண்டும் நிரூபிக்க லவன் எடுத்த முடிவை பார்த்து சீதா தேவி, ராமர் மற்றும் அவரது மூத்த மகன் குசன் கலக்கம் அடைந்தார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தினார்கள்.
ஏற்கனவே சீதாதேவி பத்தினி என்பதை நிரூபிக்கும் விதமாக தீக்குளித்து, பின்னர் ராமரை விட்டு பிரிந்து சென்றாள். அதைத் தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது மகன் தன் பத்தினி தன்மையை நிரூபிக்க மீண்டும் தீக்குளிக்க உள்ளதை நினைத்து அவள் மனம் உருகி அழுதாள்.
இதனை அடுத்து லவன் நினைத்தபடி தீக்குளித்தான். அவன் தீக்குளித்து அவனுடைய பரிசுத்தத்தையும், சீதாதேவியின் பரிசுத்தத்தையும் விளக்கினான்.
இந்நிலையில் தீக்குளிக்க சென்ற லவன் நெருப்பில் குதித்த உடனேயே ராமன் வேண்டாம்…வேண்டாம் வெளியே வா என்றும் பல முறை கூறியதோடு கருப்பா வெளியே வா.. என்று அழைத்திருக்கிறார்.
மேலும் லவன் நெருப்பினால் கரிந்த உடலோடு, உயிரோடு திரும்பினான். இதனை அடுத்து ராமன் லவனை அரண்மனையிலேயே தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆனால் அதற்கு லவன் ஒப்புக்கொள்ளவில்லை. இனி என் அண்ணன் நாட்டை ஆளட்டும்.
நான் இந்த நாட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கக்கூடிய காட்டுப் பகுதியை ஆண்டு கொள்கிறேன் எனக் கூறினான். அது மட்டுமல்லாமல் லவன் உடல் நெருப்பில் வெந்ததன் காரணமாக கருப்பு நிறமாக மாறியது. இதனை அடுத்து அனைவரும் இவரை கருப்ப சாமி என்று அழைத்தார்கள்.
இன்று கிராமப்புறங்களில் அதிகமாக வணங்கப்படும் எல்லை தெய்வம் கருப்ப சாமி வால்மீகி முனிவரின் மந்திரத்தால் பிறந்த குழந்தை லவன் தான் இன்றும் எல்லை தெய்வமாக திகழ்வதாகவும் சில செவிவழி செய்திகள் கூறுகிறது.
தனது அண்ணனுக்காக நாட்டை விட்டு காட்டுக்கு வந்து காவல் தெய்வமாக திகழ்ந்த கருப்புசாமி வரலாறு பல வகையாக கூறப்பட்டாலும், இந்த புது கதை பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன என்பதை பற்றி எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.