தமிழ்நாட்டின் வரலாற்றை தாங்கிப் பிடிக்கும் தூண்களாய்.. முக்கிய இடங்கள்..! – அட நம்ம ஊரு இருக்கா..
சங்க காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான இந்த தமிழகத்தின் வரலாற்றையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் தாங்கி பிடிக்க கூடிய முக்கிய இடங்கள் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.
இன்று வரை தமிழகத்தின் பாரம்பரியம் இந்த ஊர்களின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிந்தால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். இதில் முதலாவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் என்றாலே பெண்களுக்கான பட்டு உற்பத்தி அதிக அளவு செய்யப்படக்கூடிய ஊர் என்பது உங்களுக்கு தெரியும். இந்த காஞ்சி வேகவதி என்ற ஆற்றங்கரையில் அமைந்த அற்புதமான நகரமாகும். இந்த நகரத்தில் சமண, பௌத்த கல்வி மையங்கள் இருந்ததோடு இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட இந்த காஞ்சி நமது தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பாரம்பரிய வரலாற்றையும் தாங்கிப் பிடிக்கின்ற ஊராக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட கூடிய ஊராக விளங்குகிறது.
இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான நகரங்களில் ஒன்றான சிதம்பரத்தை எடுத்துக் கொள்ளலாம். இங்கு இருக்கும் தில்லை நடராஜர் கோவிலின் ரகசியத்தைக் கண்டு இன்றைய அறிவியலாளர்கள் ஆச்சரியம் அடையக்கூடிய அளவிற்கு மிக தொன்மை வாய்ந்ததாக உள்ளது.
மிகச் சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும் சிதம்பர நடராஜர் கோயிலின் தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர் திருவிழா நடைபெறுகிறது. இன்னும் வரலாற்று ஆய்வாளர்களால் சர்ச்சைக்கு உரிய கோயிலாக இது உள்ளது .ஒரு சாரார் இதை சமணக் கோயில் என்று கூறுவது தான் அதன் சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.
அடுத்து தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சாவூர். இந்த தஞ்சாவூரை மராட்டியர்கள் மட்டுமல்லாமல் நாயக்கர்களும் தொடர்ந்து ஆண்டு இருக்கிறார்கள். தஞ்சையின் பொற்காலமாக சோழர்கள் ஆண்ட காலத்தை நாம் கூறலாம். தஞ்சாவூர் கலாச்சாரமானது தமிழர்களின் மிகப்பெரிய பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது. அதற்கு உதாரணமாக அங்கிருக்கும் பெரிய கோவிலை நாம் கூறலாம்.
பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் ஒரு கலாச்சார மையமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்ட கோயில்களின் சிறப்புகளை எடுத்து கூறக்கூடிய பகுதியாக விளங்குகிறது.
சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றுவதோடு இங்கு இருக்கும் கோயில்களில் இருக்கக்கூடிய சிற்பங்கள் அனைத்தும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலுடன் ஒன்றுபட்டு உள்ளது.மேலும் இங்கு இருக்கக்கூடிய கோயில்கள் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றக்கூடிய வகையில் உள்ளது.
கடைசியாக வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தூங்கா நகரமான மதுரை சங்ககாலம் முதற்கொண்டு பெருமைமிகு நகரமாக இருந்துள்ளது. இந்த நகரில் அமைந்திருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு பழமை வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் அதிகளவு காணப்படுகிறது.மேலும் மதுரையை பற்றி சுவாரஸ்யமான கருத்துக்களும் கதைகளும் உள்ளது.
மேற்கூறிய அனைத்து பகுதிகளுமே தமிழகத்தின் வரலாற்றை உலகிற்கு என்று வரை எடுத்துக்காட்ட கூடிய அற்புதமான நகரங்களாக உள்ளது.