“வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் நாடு நாள்” – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்..
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு என்ற வரிகளை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம். ஏனென்றால் இன்று சிறப்புமிக்க “தமிழ்நாட்டு நாள்”, தமிழகம் எங்கும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி, தமிழர்களின் மண்ணான, தமிழ் மண்ணினை “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் தான் இந்த ஜூலை 18 என்ற பொன்னாள்.
இந்த நாளை தமிழக அரசு மட்டுமல்லாமல் தமிழக மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு மதராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் மாகாணம் ஆகி அதன் பிறகு சென்னை மாகாணமாக திகழ்ந்தது.
மேலும் பல மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்கு சூட்டப்பட்டது. நமது அண்டை மாநிலமான கர்நாடகா நவம்பர் 1ஆம் தேதியை கர்நாடக நாளாக கொண்டாடி வருகிறது என்பது நன்றாக தெரியும்.அதுபோலவே தமிழகத்தையும் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையிலும் உடனடியாக இந்த நிகழ்வு நிகழவில்லை. இதற்காக தியாகி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி மரணத்தை தழுவினார். இவரது மரணத்துக்கு பின்பு தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.
1962 ஆம் ஆண்டில் ராஜ்ய சபாவில் பூபேஷ் குப்தா எம்பி அவர்களின் முன்னிலையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்ற மசோதாவை தாக்கல் செய்த போதும், அந்த மசோதா வெற்றியடையாமல் தோல்வியடைந்தது.
இதனை அடுத்து 1964 ஆம் ஆண்டு திமுகவை சார்ந்த ராம அரங்கக் கண்ணன் எம் எல் ஏ அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரை மெட்ராஸ் மாகாணத்திற்கு சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்த போதும் அந்த தீர்மானமும் நீராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை அடுத்து கடுமையான போராட்டங்களுக்குப் பிறகுதான் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் ஜூலை 18-ஆம் தேதி சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றம் செய்தார்கள்.
மேலும் இன்று ஜூலை 18 என்பதால் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் இந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாட அழைப்பு விடுத்தார் அதனை அடுத்து இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தமிழ்நாட்டு நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் இருக்கும் DEEP TALK TAMIL தமிழ் நேயர்களுக்கு, DEEP TALK TAMIL குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் அன்பான தமிழ்நாடு நாளின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.