“சங்க இலக்கியங்களில் கடவுள்..!” – ஓர் அலசல்..!
தமிழ் மொழியின் தோற்றமானது ஆய்வாளர்களின் கணிப்புப்படி கிட்டத்தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மேலும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு தான் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தோன்றி உள்ளது. இந்த சங்க இலக்கியங்களில் 473 புலவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் 2381 பாடல்கள் அடங்கியுள்ளது.
இச்சங்க இலக்கிய நூல்களானது தமிழர்களின் வாழ்க்கை, காதல், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம் போன்றவற்றை மிக அழகான முறையில் எடுத்து இயம்புகிறது.
தமிழ் இலக்கியங்களில் இறை பாடல்கள்
பழமையான தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டால், அதில் இறைவனுக்காக பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளது. இதனை கொண்டு எந்தெந்த கடவுள்களை தமிழர்கள் வணங்கி வந்தார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் முதலில் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்ளுவோம்.
இந்த தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் காப்பு செய்யுளாக ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்தப் பாடல்
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”
இந்த பாடல் வரிகளில் “மாயோன்” என்பது திருமாலையும் “சேயோன்” என்பது முருகப்பெருமானையும் “வேந்தன்” என்பது இந்திரணையும் “வருணன்” என்பது வருண பகவானையும் குறிக்கிறது.
இது மட்டுமல்லாமல் தொல்காப்பியத்தில் பலராமனை பற்றிய குறிப்புக்களையும், சில பாடல்களில் காண முடியும்.
இரண்டாவதாக நற்றிணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த நற்றிணையானது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 41 பாடல்களைக் கொண்ட இது, 2000 வருடங்களுக்கு முன்பே இயற்றப்பட்டது.
பெருந்தேவனாரால் எழுதிய வாழ்த்து பாடலில் சங்க காலங்களில் அவர்கள் வழிபட்ட கடவுள் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வரிகள்
“மாநிலஞ் சேவடி யாக தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாக திசை கையாக…”
இந்தப் பாடல் வரிகளில் திருமாலின் உருவம், சூரிய, சந்திரன், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றை வணங்கி இருக்கிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.
மேலும் தமிழ் கடவுளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் முருகப்பெருமானை பரி பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பரிபாடலும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றுதான்.
பொதுவாக பரிபாடலில் பெருமாளுக்கு 8 பாடல், முருகனுக்கு 31 பாடல், பெண் தெய்வமான கொற்றவைக்கு ஒரு பாடல், வையைக்கு 26 பாடல், மதுரைக்கு நான்கு பாடல் என மொத்தம் 70 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
“புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ!
இது போலவே புறநானூறில் இருக்கும் 400 பாடல்களும் புறத்திணையைச் சார்ந்த எட்டுத்தொகை நூலாகும். இந்த நூலில் சங்க காலத்தை ஆண்ட அரசர்கள் பற்றியும், மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும் புறநானூற்றுப் பாடல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் உள்ளது. குறிப்பாக புறநானூற்று ஆசிரியர் பெருந்தேவனார் சிவனை “அருந்தவத்தோன்” என குறிப்பிடுகிறார்.
சமண கோட்பாடுகளை உள்ளடக்கிய நூலாகிய சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோ அடிகள். இவர் எழுதிய நூலில் “கொற்றவை” பற்றிய தகவல்கள் உள்ளது. முதலில் கண்ணகியும், கோவலனும் கொற்றவையின் கோவில் தான் மதுரைக்கு வந்த பின் தங்கி இருக்கிறார்கள்.
இந்தக் கொற்றவையை ஐயை, கார்த்திகை என்ற பெயர்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் சிலப்பதிகாரம் 133 – 138 பாடல் வரிகளான
“மற்றவை நினையாது மலைமிசை
நின்றோம் பொற்றாமரைத்தாள் உள்ளம்…
என்ற பாடலில் மதுரைக்கு கோவலன் செல்ல முயலும் போது அங்கிருந்த “திருமாலிருஞ்சோலை மலை” அதாவது அழகர் கோயில் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட, அவன் இடப்பக்கம் திரும்பி ஒரு சிறு மலையைக் கடந்து, பின்னர் ஆறு தோட்டங்களை கடந்தால் அழகர் மலையை அடையலாம் என்பதை அழகாக விளக்கி இருப்பார்.
திருமால் நின்ற கோலத்தில் இருப்பதால் திருமாலை வழிபட்டு பின்னர் கருடனை வழிபட வேண்டும். அதன் பிறகு தாமரைப் போன்ற அவரது பாதங்களை சரணடைந்தால் எல்லா பாவமும் நீங்கும் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
இப்படி சங்க நூல்களை ஆராய்ந்து பார்த்தால் சங்ககாலத்தில் தமிழர்கள் சாதன தர்மத்தையும் கடைபிடித்து இருந்ததால் தான் அதில் இருக்கக் கூடிய கடவுள்களான திருமால், சிவன் போன்ற தெய்வங்களின் குறிப்புக்கள் உள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த காலகட்டங்களில் தெய்வங்களுக்கு இடையே எந்த வேற்றுமையையும் அவர்கள் காட்டவில்லை என்பதால் தான் அனைத்தையும் சமமாக பாவித்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.
அதுமட்டுமல்லாமல் சங்க கால இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் தெய்வங்களை இன்று வரை நாம் தொடர்ந்து வணங்கி வருகிறோம். அத்தோடு பஞ்சபூத வழிபாடு என்பது தொன்று தொட்டு தமிழர்களின் பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் அன்று முதல் இன்று வரை இந்து சமயத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. அது எப்படிப்பட்ட காலகட்டமாக இருந்தாலும் தன் கிளை பரப்பி வளர்ந்து கொண்டே வருகிறது.