• December 3, 2024

பிறப்பு முதல் இறப்பு வரை புடவையின் சிறப்பு..!

 பிறப்பு முதல் இறப்பு வரை புடவையின் சிறப்பு..!

தாயின் கருவறைக்குள் இருந்து தவழ்ந்த குழந்தை உலகிற்கு முதல் முறையாக வெளி வந்த பின்னால் உறங்குவது என்னவோ புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் தான். அப்படிப்பட்ட இந்த புடவைக்குள் ஒளிந்திருக்கக் கூடிய பல விதமான முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் தெள்ள தெளிவாக பார்க்கலாம்.

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். எத்தனை தான் உடைகள் பல இருந்தாலும் புடவைக்கு என்று ஒரு தனி மதிப்பு என்றுமே இருக்கும். தமிழ் சம்பிரதாயங்களில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக இந்த புடவை விளங்குவதோடு பெண்களுக்கு கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த புடவை அவர்களின் கர்ப்பப்பையில் கரு வளரும் போது அதற்கு உரிய பாதுகாப்பை வழங்குகிறது என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

தமிழ் சம்பிரதாயங்களில் பெண்களுக்கு என்று மாறாப்புச் சீர் செய்வார்கள். இது பூப்பு எய்ய கூடிய வயதில் இருக்கும் பெண்களுக்கு நடத்தப்படும் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வுக்கு பின் அந்த பெண்கள் பூப்படைந்து விட்டால் பாவாடை, தாவணியை போடுவார்கள். அதுவே வளர் இளம் பெண்கள் என்றால் புடவையை அணிவது தான் வழக்கம் மற்றும் மரபு. அதிலும் தாய் மாமன் கொடுக்கும் சீரில் புடவை முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.

ஆள் பாதி, ஆடை பாதி என்று கூறுவார்கள். அந்த வகையில் புடவை பெண்களுக்கு அபார அழகை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சுமக்க இருக்கும் கருவிக்கும் பாதுகாப்பை கொடுக்கிறது.

அது எப்படி தெரியுமா? புடவையை கட்டும் போது இடுப்பு பகுதிக்கு மேல் இருக்கும் வயிற்றுப் பகுதியின் ஒரு பகுதி வெளியே சூரிய ஒளி படும்படி தெரியும். அது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை இருக்கின்ற பகுதிகளில் மடிப்புகளாக புடவையின் ஒரு பகுதி சொருகப்பட்டு இருக்கும்.

இது எதற்கு தெரியுமா? கர்ப்பப்பையில் கரு தங்கி இருக்கின்ற வேளையில் வயிற்றுப் பகுதியில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் குழந்தை பாதுகாப்பாக இருப்பதற்காகத்தான் இந்த மடிப்பு பகுதி குறிப்பாக கர்ப்பப்பை பகுதியில் படும்படி சேலை அணியும் முறையை நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருக்கக்கூடிய பகுதியில் சூரிய ஒளி படுவதின் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதுமான அளவு சூரிய ஒளியால் கிடைக்க வேண்டிய சத்துக்கள் எளிதில் கிடைக்கும். அதற்காகவே தான் இந்த புடவையை குறிப்பாக பெண்களுக்கு பாரம்பரியமாக அணிய பழக்கப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனை விடுத்து நாம் நாகரீகம் என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்டுக்கு மாறியதின் காரணத்தால் பலவிதமான பிரச்சனைகள் பெண்களுக்கு கருப்பையில் ஏற்பட்டு உள்ளது.மேலும் இறுக்கமான உடைகள் இடையிருக்கும் பகுதியில் அணிவதின் மூலம் கர்ப்பப்பை வளர்ச்சி, விரிவடையும் தன்மை சற்று பாதிக்கப்படுகிறது என்பது எதார்த்தமான உண்மை.

இதனால் தான் பிறப்பு முதல் இறப்பு வரை புடவை பெரும் பங்கு நம் சம்பிரதாயங்களில் வகிக்கிறது. தொட்டிலில் படுத்து விளையாடிய பிள்ளை வளர்ந்த பின் பாவாடை தாவணி, திருமண பருவத்தில் முகூர்த்த புடவை, திருமணத்தின் போது ஊஞ்சலில் விளையாட ஊஞ்சல் புடவை, நலுங்கிடும் போது நலுங்குக்கு என்று தனிப் புடவை, இல்லறத்தில் இணைவதற்கும் சாந்தி முகூர்த்த புடவை, வளைகாப்பு புடவை இப்படி பல நிகழ்வுகளில் பயன்படும் புடவை பெண்ணின் வாழ்க்கையின் இறுதியிலும் பிறந்த வீட்டு புடவையோடு தான் முடிகிறது என்ற உண்மையை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.