நாய், பூனைகள் வளர்க்க தடையா ???
நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என ஈரான் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. இது அந்த நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பன்றிகளை போல நாய், பூனைகளும் அசுத்தமானவை என ஈரான் அரசு கருதுவதே இந்த சட்டம் நிறைவேற்றுவதற்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன. 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளை விட சுற்றியிருக்கும் மனிதர்களிடம் அதிகம் அன்பு காட்ட வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்தவே இது போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவின்படி நாய்கள், பூனைகள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுமாம். மேலும் இந்த மசோதா நிறைவேறிய பின் நாய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து நாய்களையும் மூன்று மாதங்களுக்குள் பறிமுதல் செய்வார்களாம்.
கூடுதலாக வீட்டு உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளை நாய் மற்றும் பூனை வைத்திருக்கும் நபர்களுக்கு வாடகைக்கு விட அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாய்கள் நடமாடுவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் அரசு நம்புகிறது.
ஈரானின் இந்த சட்டத்தை உலகெங்கிலுமுள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாய், பூனை பிரியர்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நாய், பூனை போன்ற விலங்குகளை கொடூரமான விலங்குகளாக கருதி தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என செல்லப்பிராணிகளின் பிரியர்கள் ஆக்ரோஷத்துடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரான் நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களே இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் உள்ள பூனை வளர்ப்பவர்கள், தங்களது பூனையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து “இந்த செல்லப்பிராணி பார்ப்பதற்கு Criminal போலவா இருக்கிறது?” என்ற கேள்வியுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் கைப்பற்றப்படும் செல்லப்பிராணிகளை ஈரான் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை குறித்த சரியான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- “கவரிமான் என நினைத்தீர்களா? அது மான் அல்ல… யாக் எருமை! – ஒரு சுவாரசிய கண்டுபிடிப்பு”
- அமெரிக்காவை பற்றி நீங்கள் அறியாத அதிசய தகவல்கள் – உங்களை வியப்பில் ஆழ்த்தும் உண்மைகள்!
- “பட்டினத்தார் – வணிகரில் இருந்து மகானாக மாறிய அற்புத கதை தெரியுமா?”
- மனதின் விசாலமே வெற்றியின் விதை! – புத்தரின் அற்புத உபதேசம்
- கோஹினூர் வைரத்தின் மர்மங்கள்: உலகப் புகழ்பெற்ற வைரம் இந்தியாவுக்கு திரும்புமா?
மனிதர்கள் மற்ற இனத்தின் மீது பாசம் வைப்பதை இது போன்ற சட்டங்கள் தடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.