வரலாற்றில் இந்தியா, சக்திவாய்ந்த நாடாக இருந்ததா?
2000 ஆண்டுகளில் அதிகமான காலம் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு இந்தியா – இதனை பொருளாதார வரலாற்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கஸ் மாடிசன் (Angus Maddison)
இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு பின், அதாவது, 1 AD முதல் 2008 வரை பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒப்பீடு உள்ளது.
1 AD – இன்று வரையான காலக்கட்டத்தில், பொருளாதார தரவரிசையில், சுமார் 1700 ஆண்டுகள் இந்தியா முதல் நிலை, இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா 2ஆம் நிலை.
1 AD முதல் 1500 AD வரை உலகிலேயே GDPயில் முந்தய நிலையில் இருந்தது இந்தியா. எந்த அளவு என்றால் உலகின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 30% இந்தியாவில் மட்டுமே. இந்தியாவிற்கு அடுத்ததாக சீனா உலகின் மொத்த உற்பத்தியில் 25%. மற்ற ஐரோப்பிய நாடுகள் அதற்கடுத்த நிலையில் உள்ளன.
1 AD முதல் 1500 AD வரை இந்தியாவின் உற்பத்தி 30%இல் இருந்து மெதுமெதுவாக குறைந்து 25% என்ற நிலைக்கு வந்தது. அதே காலக்கட்டத்தில் சீனாவின் மொத்த உற்பத்தியும் சிறிது சிறிதாக மாறி அதே 25% என்ற நிலைக்கு வந்தது. அதாவது 1500 AD- ல் உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25%, சீனாவின் பங்கு 25%. மீதமுள்ள அனைத்து நாடுகளின் மொத்த உற்பத்தி மீதமுள்ள 50%.
1500 – 1600 AD, சீனாவின் உற்பத்தி முதல் நிலையிலும் இந்தியா இரண்டாவது நிலையிலும் இருந்தன. 1600 – 1700 AD, சீனாவின் உற்பத்தி இரண்டாம் நிலைக்கு குறைந்தது, இந்தியாவின் உற்பத்தி முதல் நிலைக்கு மீண்டும் அடைந்தது.
1700 – 1820, சீனாவின் மீண்டும் உலக உற்பத்தியில் முதலிடம் அடைந்தது. ஆனால் 1700க்குப்பிறகு, அதாவது முகலாய சாம்ராஜ்யம் முடிந்து, இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் பொது இந்தியாவின் உற்பத்தி வேகமாகக் குறையத் தொடங்கியது. காலனி ஆட்சியினால் இந்தியாவின் உற்பத்தி வேகமாகக் குறைந்தது.
1820-ல் சீனாவின் உற்பத்தி உலகிலேயே முதலிடத்தில் இருந்தது வேகமாகக் குறைந்தது. அதற்குக் காரணம் அங்கும் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் அங்கு ஆக்ரமிப்பு செய்து சீனப் பொருளாதாரத்தை சர்வ நாசம் செய்தன. அதே காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியது. மேற்கு ஐரோப்பா என்றால் குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், பின்னர் ஜெர்மனி. அந்நாடுகளின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவை அமெரிக்க, ஆசிய கண்டங்களில் காலனி ஆட்சி செய்ததால்.
1820 – 1950 AD, இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தன. USAவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக முன்னேறி, இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகிலேயே முதல் நிலையை அடைந்தது. ஆனால் மேற்கு ஐரோப்ப நாடுகள், அதாவது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தங்கள் காலனி நாடுகளை மொத்தமாக இழந்ததால் அந்நாடுகளின் பொருளாதாரம் பெரிதும் குறைந்தது. அதேபோல் ஜப்பானின் பொருளாதாரம் 1870–1950 வேகமாக முன்னேறியது.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தது. அதேபோல் 1949இல் சீனாவில் உள்நாட்டுப் போர் முடிந்தது. அதனால் 1950–1978, இரு நாடுகளின் பொருளாதாரமும் மெதுவாக ஆனால் திடமாக முன்னேறின. இரு நாடுகளும் தாங்களே ஆட்சி செய்யத் தொடங்கியபின் அவர்களின் பொருளாதாரம் மெது மெதுவாக முன்னேறின.
சீனாவில் 1979இல் பொருளாதார மாற்றங்கள் செய்யத் தொடங்கியதிலிருந்து அந்நாட்டின் முன்னேற்றம் முடுக்கி விடப்பட்டு வேகமாக முன்னேறியது. அதேபோல் 1991இல் இந்தியாவில் திரு. நரசிம்ஹ ராவ் அவர்கள் ஆட்சியில் பொருளாதார மாற்றங்கள் செய்யப்பட்டபின் இந்தியாவின் பொருளாதாரம் முடக்கி விடப்பட்டு வேகமாக முன்னேறத் தொடங்கியது.
21ஆம் நூற்றாண்டு, மீண்டும் ஆசியா, பொருளாதார ஆளுமை கொண்டதாக மாறும் என்பது உலக பொருளாதார வல்லுநர்கள் அபிப்பிராயம். 1 – 1700 AD போல் சீனா, மற்றும் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் உயர்ந்த நிலையில் இருக்கும் என்பது உலக பொருளாதார வல்லுநர்கள் எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்…!
கிரிதரன் வேலாமூர்
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி