• December 3, 2024

தலைவலியை நிமிடத்தில் சரியாக்கும் திருநீற்றுப்பச்சிலை

 தலைவலியை நிமிடத்தில் சரியாக்கும் திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலை

காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிற்கோலம் எனும் தலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர். இங்கு திருத்தல மரம் உருத்திரட்சடை என்னும் திருநீற்றுப்பச்சிலை தான். இத்திருக்கோவிலின் தலவிருட்சம் தற்போது அழிந்துவிட்டது. எனினும் சிறப்பான மூலிகைகளை மக்களுக்கு அறிமுகம் செய்ய அவைகளை தல விருஷங்களாக வைக்கும் மரபு நம்மிடம் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவே இந்த செய்தி.

.shaivam.org

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு. ‘ஆஸிமம் பேசிலிகம்’ (Ocimum basilicum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட திருநீற்றுப் பச்சிலை, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. லினாலூல் (Linalool), யுஜெனால் (Eugenol), ஜெரானியால் (Geraniol) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன.
Tamil – Thiruneetru pachilai
English – Sweet basil
Telugu – hutulasi
Malayalam – Ram thulasi
Hindi – Babui tulsi
Botanical name – Ocimum basilicum

இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது. இது இந்தியா முழுவதும் காணப்படும் ஒருவகை செடியினமாகும்.

“திருநீற்றுப் பச்சை சிலேஷ்சர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே பெரிய
சுரத்திரத்த வாந்தி சரமருசி நில்லா
வுருத்திரச்ச டைக்கே யுரை”
– அகத்தியர் குணபாடம்

பயன்கள்

இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது. வியர்வையை பெருக்கச் செய்யும். இலைச்சாறு வாந்தி சுரம் ஆகியவற்றைப் போக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இதன் விதையை தக்க முறைப்படி மருந்து செய்து கொடுக்க தாய்க்கு நல்லது. இதன் வேர் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலை மாலை அருந்திவந்தால் வயிற்றில் பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. முகப்பரு உள்ளவர்கள் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும். இதன் இலைச்சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலி, சீழ்பிடித்தல் நீங்கும். திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும்.

முகப்பருக்கள் மறைய: இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோலச் செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

இருமல் கட்டுப்பட: இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

வெள்ளைபடுதல் குணமாக : இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன், காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து, உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும், 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும்.

தலைவலி குணமாக : இலையைக் கசக்கி மணத்தை நுகர வேண்டும்.

வாய்ப்புண் குணமாக : 4 இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.

வாந்தி கட்டுப்பட : இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, 100 மி.லி. வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்
இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட, கப நோய்கள் மறைவது மட்டுமன்றி செரிமானக் கோளாறுகள் சாந்தமடையும். இதன் வாசனை நமது சுவாசப் பாதையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

இதன் இலைகளையும் விதைகளையும் குளிக்கும் நீரில் அரை மணி நேரத்துக்கு முன்பே ஊறவைத்து, வாசனைமிக்க மூலிகைக் குளியலை மேற்கொள்ளலாம். சோப்பு, ஷாம்புகளின் துணையில்லாமலே உடலைத் தூய்மையடையச் செய்யும் குளியல் உத்தி இது.!

அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன்