• December 30, 2024

ராஜராஜசோழன் கோவிலுக்குள் வைத்த புதையல் என்ன?

 ராஜராஜசோழன் கோவிலுக்குள் வைத்த புதையல் என்ன?

தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்னென்ன?

தஞ்சை பெருவுடையார் கோயில் இந்த கோயிலை பார்க்கும் போதும், இந்த கோயிலின் பெயரை கேட்கும் போதும், மெய் சிலிர்க்கும் என்றால் அதுதான் ராஜராஜ சோழன்! சொல்லிச்சென்றவர்கள் மத்தியில், சொல்லி செய்தவன் ராஜராஜசோழன்.

ஆயிரம் ஆண்டு கடந்தும் அசைக்கமுடியாத கோவிலை கட்டி, இன்றும் நினைவில் இருக்கும் அருள்மொழி சோழனின் சாதனைகள் பல உண்டு. ராஜராஜ சோழன், சேர மற்றும் பாண்டியர்களை வென்று அவர்களின் கருவூலத்தில் இருந்தும், 1010-ம் ஆண்டில் கும்பாபிஷேகத்தில், அவரும், அவரது மனைவியர் உள்பட குடும்பத்தினர் கொடுத்த தானங்களையும், தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த பொன், வைரங்கள் மற்றும் ரத்தினங்களின் எடை, மதிப்பு என அனைத்தையும் பெரிய கோவிலின் விமானத்தின் தென்புறத்தில் உள்ள கல்வெட்டில் பதித்து விட்டுச் சென்றிருக்கிறான்.

இதன் மதிப்பை தெரிந்துகொள்வதற்கு முன்பு கழஞ்சு என்ற சொல்லின் பொருளை தெரிந்து கொள்ளுங்கள். அதிக அளவு தங்கத்தைக் அளக்கும் அலகாக கழஞ்சு என்ற சொல்லை, பழந்தமிழர்கள் பயன்படுத்தினர்.

ஒரு நாட்டுப்புறப் பாடலில் கூட ‘ஒரு கிழிஞ்சி நெல்லு தாரேன், பொண்ணு தாரியா சம்மந்தி’ என்கிற பாடல்கூடஇருக்கிறது.

இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு. கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்படுகிறது. ராஜராஜசோழன் கோவிலுக்கு கொடுத்த பொன், வைரங்கள்,ரத்தினங்கள் என அனைத்தையும் குன்றிமணி , மஞ்சாடி, கழஞ்சு, என்ற அலகில்தான் குறிப்பிட்டிருக்கிறான். அந்த கல்வெட்டுகளில் பல பத்திகள் இருக்கின்றன.

அதில் முதலாவது பத்தியில், கழுத்துச் சங்கிலி ஒன்றில் 15 மாணிக்கக்கல், 16 மரகதக்கல், 28 வைரக்கல் மற்றும் முத்துவகைகளில் பயிட்டம், குறுமுத்து, தையித்த முத்து, ஒப்புமுத்துக்கள் 40 என இவற்றின் எடை மொத்தம் 170 கழஞ்சு, ஏழு மஞ்சாடி. அவற்றின் எடை 500 காசு என கல்வெட்டில் செதுக்கியிருக்கிறார். இது இன்றைய எடையில் 930 கிராம்.

இவ்வாறாக ஒவ்வொரு பத்தியிலும் , 100 க்கும்மேற்பட்ட வைரங்கள், மாணிக்க கற்கள், மரகத கற்கள் மற்றும் 1000 மேற்பட்ட முத்துவகைகள் என கொட்டிகொட்டி, குழைத்து குழைத்து கட்டியுள்ளான் ராஜராஜசோழன்.

இவை அனைத்தும் சோழ ராஜ்யம் முடிந்து, அதன் பின் வந்த பல சாம்ராஜ்யங்களால் கவர்ந்து செல்லப்பட்டன. இவற்றில் ஒரு சிலது மட்டுமே இப்பொழுது இருப்பதாக நம்பப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடப்பணி கி.பி.1003 ல் தொடங்கி கி.பி. 1010-ல் முடிவடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் பணி முடிந்தும் முடியாதிருக்கும் நிலையில், ராஜராஜசோழன் கி.பி. 1006 ல் சாளுக்கிய அரசன் சத்யாசரயனை போரில் வெற்றி கொண்டு, அவன் நாட்டில் இருந்து கொண்டு வந்த தங்களை உருக்கி, அதை பொற்பூக்களாக செய்தான். பின் அந்த பொற் பூக்கள் கொண்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டான் இந்த வீரன்.

தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது என்பது கிபி 1895 ஆம் ஆண்டில் ஹால்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறிய பிறகு, உலகிற்கு தெரியவந்தது. அதற்கு முன் இது பூதம் கட்டிய கோவில் என்றும் வேறு சோழ, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் பலவிதமாக பேசப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோவில் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் தலைமை சான்ற கற்கோவில் ஆகும்.

இதன் மிகப் பிரம்மாண்டமான விமானம் உலக அதிசயமான எகிப்தியப் பிரமிடுகளைப் போல, கூர்நுனிக் கோபுரமாக அமைந்து, கர்ப்பக்கிரகத்திலிருந்து மிக உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயில் உயரத்தைவிட, தஞ்சை பெரிய கோவில் உயரம் பல மடங்காகும்.

உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான மோனாலிசா ஓவியம்கூட கிபி 1503 தான் வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறையைச் சுற்றியுள்ள உட்சுவர்களில் ராஜராஜசோழன் காலத்து ஓவியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

1931 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ் கே கோவிந்தசாமி அவர்கள் கண்டறிந்த பின்னரே, அவைகள் உலகின் பார்வைக்கு தெரியவந்தன. சிதம்பரம் கோவிலின் கிழக்கு புற மற்றும் மேற்குப் புற கோபுரங்களில் பரத நாட்டியத்தின் 108 நடனங்களும் அவற்றிற்கான நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள செய்யுட்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் இரண்டாம் தளத்தில் சிவபெருமான் ஆடிய 108 வகை நடனங்களில் 81 ஒரு வகை நடனங்கள் உருவங்களாக செதுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 27 நடனங்கள் உருவாக்கப்படாமல் நின்றுவிட்டன.

Thanjavur periya kovil 3

தஞ்சை பெரிய கோவிலுக்கு விளக்கு எறிய வழிவகை செய்த வரலாறும் ஆகச்சிறந்த ஒரு வரலாறு. இதில் ராஜராஜசோழனின் அறிவும், அவன் மக்கள் மீது அவர் வைத்திருந்த பாசமும் வெளிப்படையாக தெரிகிறது.

தஞ்சை பெரிய கோவில் விளக்குகள் எரிய ராஜராஜசோழன் 6956 பசுக்களையும், 8568 ஆடுகளையும், 60 எருமைமாடுகளையும் நிவந்தமாக அளித்தார்கள்.

நிவந்தம் என்றால் ‘ஒரு கிராமத்தையோ/ஊரையோ ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு ஆண்டுதோறும் இவ்வளவு பொருள் அல்லது சேவைகளைச் செய்தால் வரி விலக்கு’ என்று அறிவிக்கும் வழக்கமிருந்தது. சில நேரங்களில் கோவிலின் முழு பராமரிப்பையும் அவ்வூர்களே ஏற்றுக்கொள்ளும். இதுவே நிவந்தம் எனப்பட்டது.

இவ்வாறு நிவந்தமாக அளிக்கப்பட்ட கால்நடைகளில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு 182 விளக்குகள் எரிந்தன. இந்த பசுக்களும் ஆடுகளும் எருமைகளும் தஞ்சையில் 182 இடையர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும் பெரிய கோவில் விளக்குகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலங்கையிலிருந்து இலுப்பை எண்ணை வந்தது அன்று.

ராஜராஜ சோழனுக்கும், பெரிய கோவிலுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசு 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, 1000 ரூபாய் நோட்டில் தஞ்சை பெரியகோவிலின் படத்தை வெளியிட்டது. ஆனால் , இன்று 1000 ருபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. அது என்னவோ தெரியவில்லை. தமிழனின் அதிசயங்களையும், ஆவணங்களையும், அடையாளங்களையும், உலகிற்க்கு தெரியபடுத்துவதில், ஒரு பாரபட்சம் காட்டுவதில் குறியாக இருக்கிறது மத்திய அரசு.

இறைவனை நம்பி கட்டியகோவிலில் பல மூடநம்பிக்கைகள் மூடியுள்ளது. இதன் கோபுரம் நிழல் தரையில் படாது என்றும், கோவிலின் மூல கோபுர வழியே நுழைந்தால் அரசியல் தலைவர்களுக்கு ஆகாது எனவும், இதனால் இந்திராகாந்தி மற்றும் எம் ஜி ஆர் ஆகியோரின் பின்னைடைவுக்கு இக்கோபுர வழி நுழைந்ததே காரணம் என்றும், அதனால் தான் 1000 ஆண்டு நிறைவு விழாவில் கூட அப்போதைய முதல்வராக இருந்த கருனாநிதி கூட மூல கோபுர வழிக்கு அருகில் இருந்த மற்றொரு வழியில் சென்றார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஆயிரம் தான் இருந்தாலும், இந்த ஆயிரம் ஆண்டில், காலங்கள் கடந்தாலும், பல ஆட்சிமுறைகள் மாறினாலும், இன்றும் அதே இளைமையோடு, அதே கம்பீரத்தோடு, அதே வீரத்தோடு, தமிழனின் அழியாத அடையாளமாய் என்றும் இருக்கும் நம் தஞ்சை பெருவுடையார் கோவில்.

இது ஆலயம் மட்டும் அல்ல, அதிசயம்!



1 Comment

  • அற்புதம்????????

Comments are closed.