• November 23, 2024

இந்திரா விழா பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான தகவல்கள் இதோ!

 இந்திரா விழா பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான தகவல்கள் இதோ!

அது ஒரு சித்திரை மாதத்தின் பௌர்ணமி நாள். அன்றைய காலை பொழுதில் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே பரபரப்பாக இருக்க, பல்வேறு வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்க, ஒருபக்கம் தெருக்களும்  தூய்மைப்படுத்தபட்டு, மிக பெரிய கோலங்கள் போடப்படுகிறது. தூரத்தில் கோவில் மணி ஒன்று ஒலிக்க, அர்ச்சகர்கள் பூசாரிகள் தங்கள் கடமைகளை செய்ய தொடங்குகிறார்கள்.

அதேசமயம் உழவர்கள் தங்கள் வயல்களை நோக்கி வேகமாக செல்கிறார்கள். ஒவ்வொரு விவசாயின் கண்களிலும் ஆழ்ந்த நம்பிக்கையின் ஒளி தெரிகிறது. மற்றொரு பக்கம் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி, பாடல்களைப் பாடுகிறார்கள். அவர்கள் குரல்களில் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஊரின் மையத்தில், ஒரு பொன் மூங்கில் கம்பம் நிறுவப்பட்டு,  அதன் மீது பட்டுத் துணி சுற்றப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் திரண்டு வர,  அவர்கள் கண்களில் நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருக்கிறது. பிறகு மக்கள் கூட்டம் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, அனைவரின் குரலும் ஒன்றுபட்டு ஒரு பெருத்த குரலாக ஒரே வேண்டுகோளை முன்வைக்கிறார்கள்..

“இந்திரா! எங்கள் வயல்களை வளப்படுத்து!” என்று சொல்கிறார்கள். 

வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறக்கின்றன. அவற்றின் சிறகடிப்பு ஒலி காற்றில் கலக்கிறது.

“இது நிகழ்வு ஒரு விழா, அது வெறும் விழா அல்ல… இது ஒரு வாழ்க்கை முறை… இது தான் தமிழர்கள் சங்ககாலத்தில் கொண்டாடிய “இந்திரவிழா”

“வரலாற்றின் ஏடுகளில் இருந்து, நம் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள புறப்படுவோம்…”

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில், தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, அவர்களின் ஆழமான நம்பிக்கை, அதையெல்லாம் தாண்டி சமூக அமைப்புகள் பற்றிய பல்வேறு தகவல்கள், சங்க இலக்கியங்கள் வழியாக நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவற்றில் ஒன்றுதான் சங்க கால தமிழர்கள் மிக முக்கிய விளைவாக கொண்டாடிய இந்திர விழா! மருத நிலத்தின் தெய்வமாக வணங்கப்பட்ட இந்திரனைப் போற்றுவதற்காக, இந்த விழா நடத்தப்பட்டது. 

மருதநிலம் என்பது வயல்களையும் வயல் சார்ந்த பகுதிகளையும் குறிக்கும். இந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில், உழவு!  அதாவது விவசாயம்.

இந்திரன் மழையின் கடவுளாகவும் கருதப்பட்டார். எனவே, இந்திரனை வணங்குவதன் மூலம் நல்ல மழை பெய்யும் என்றும், அதன் விளைவாக நல்ல விளைச்சல் கிடைக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான், இந்திரவிழா தோன்றியது!

சங்ககாலத்தில் இந்த இந்திர விழா எப்பொழுது கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இலக்கியங்கள் இருக்கிறது. ஆண்டுதோறும் இளவேனில் காலத்தில் , குறிப்பாக, சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளன்று இவ்விழா தொடங்கும். 

சிலப்பதிகாரத்தில் உள்ள “இந்திரவிழவூரெடுத்த காதை”  என்ற வரி இதை உறுதிப்படுத்துகிறது. 

இக்காதையின்படி, சித்திரை மாத பௌர்ணமிக்கு ஏழு நாட்களுக்கு முன்னர், இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகும்.  இந்த விழா மொத்தம் 28 நாட்களில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரமாக மணிமேகலை காப்பியம் இருக்கிறது. 

மணிமேகலை காப்பியத்தின் “விழாவறை காதை” மூலம், இந்திரவிழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டதை தெரிந்து கொள்ள முடிகிறது. 

கொஞ்சம் எண்ணி பாருங்கள்! ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 28 நாட்கள் இந்த விழாவை, மருத நிலத்து மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.  இவ்வாறு 28 நாட்கள், ஒரு நீண்ட காலமாக இந்த விழாவை அவர்கள் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். 

இந்திரவிழாவின் தொடக்கம் “கால்கோள்” எனும் நிகழ்வுடன் ஆரம்பமாகும். இந்த நிகழ்வில் கணுவெழுந்த பொன்மூங்கில் தண்டு நடப்படுவது தான் இந்த விழாவின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு  சடங்கு ஆகும்.  அன்று ஆரம்பித்த அந்த சடங்கு இன்றுவரை தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இதுதான் மிக ஆச்சரியமான ஒரு விஷயம். இன்றளவும் தமிழருடைய பெரும்பாலான விழாக்களில் “கால்கோள்” என்ற ஒரு நிகழ்வு இருக்கும். இது இந்திர விழாவோடு தொடர்புடைய ஒரு நிகழ்வு.  அதனால்தான் இன்றும் கால் கோள் நட்டாச்சு ,திருவிழா ஆரம்பிச்சு, என்ற சொல் வழக்கமும் இருக்கிறது.

இந்திர விழாவின் முக்கிய நோக்கமே மழை பெறுவது தான்.  விவசாயத்திற்கு மிக முக்கியமானது மழை. எனவே அந்த மழையின் கடவுளாக இருக்கும் இந்திரனை நோக்கி தான், நல்ல மழை பெற வேண்டும், எங்கள் விவசாயம் தழைக்க வேண்டும்,  நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்திற்கு தேவையான மழையை பெறுவதற்காக, இந்திரனை நோக்கி இந்த விழா எடுத்ததுதான், இந்த விழாவின் முதன்மையான நோக்கம். 

மேலும் மணிமேகலையில், சீத்தலைச் சாத்தனார் இந்திரவிழாவை ஒரு “சாந்திப் பெருவிழா” என்று குறிப்பிடுகிறார். “தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்” என்ற வரி மூலம், பசி, நோய், பகை போன்ற துன்பங்களிலிருந்து விடுபட வேண்டி இவ்விழா கொண்டாடப்பட்டதை அறிய முடிகிறது.

மேலும் இதையெல்லாம் தாண்டி, இந்திர விழாவில் பல்வேறு நிகழ்வுகள் இருக்கும்.  இவை மக்களை மகிழ்விக்கவும், ஒற்றுமை வளர்க்கவும் அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.

கால்கோள்: விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் சடங்கு.

தெய்வ வழிபாடு: இந்திரனுக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்.

கலை நிகழ்ச்சிகள்: நடனம், இசை, நாடகம் போன்ற கலை நிகழ்வுகள்.

விளையாட்டுகள்: பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள்.

உணவு விருந்து: சிறப்பு உணவு வகைகள் தயாரித்து பகிர்ந்து கொள்ளுதல்.

கந்திற்சாலை: விழாவின் போது வந்த விருந்தினர்களுக்கான தங்குமிடம்.

இந்திரவிழா வெறும் மத சார்ந்த நிகழ்வாக மட்டும் இருக்கவில்லை. இது ஒரு முக்கியமான சமூக நிகழ்வாகவும் இருந்திருக்கிறது. 

சமூக ஒற்றுமை: பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கொண்டாடினர்.

பொருளாதார நடவடிக்கைகள்: விழாவின் போது வணிகம் செழித்தோங்கியது.

கலாச்சார பரிமாற்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கலை வளர்ச்சி: பல்வேறு கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்பட்டன.

மேலும் சங்க காலத்தில் கூட ஒரு சமயத்தில் தொடர்ந்து நடந்து வந்த இந்திர விழா,  ஒரு மிகப்பெரிய அசம்பாவத்திற்கு பிறகு நடக்கவில்லை. அதைப் பற்றிய ஒரு குறிப்பு மணிமேகலை இருக்கிறது.

மணிமேகலையில், அறவண அடிகள் என்ற பாத்திரம் ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது. அவரது கூற்றுப்படி: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காலத்திற்கு இடையே ஒரு பெரிய கடற்கோள் (tsunami) ஏற்பட்டது. இந்த கடற்கோள் காரணமாக புகார் நகரம் அழிவுக்கு உள்ளானது. இந்த அழிவு இந்திரவிழாவை மக்கள் மறுத்ததன் விளைவாக நேர்ந்தது என அறவண அடிகள் கருதுகிறார்.

ஆக சிலப்பதிகார காலகட்டத்திற்கும் மணிமேகலை கால கட்டத்திற்கு இடையே நடந்த அந்த கடற்கோள் அதாவது சுனாமி பற்றிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் இருக்கிறது.  இது உண்மையில் நடந்ததா என்பதை பற்றிய பல்வேறு ஆய்வுகள், இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

தொல்லியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், புகார் பகுதியில் பண்டைய காலத்தில் கடற்கோள் ஏற்பட்டதற்கான சான்றுகளைத் தேடி வருகின்றனர்.

ஒருவேளை அந்த மிகப்பெரிய கடற்கோள் ஏற்பட்டதற்கான சான்று கிடைத்தால்,  சிலப்பதிகாரம் நிகழ்வும், மணிமேகலை காப்பியமும் உண்மையானது என்பதற்கான சான்றாக அமையும்.  இதையெல்லாம் தாண்டி அந்த காலகட்டத்தில் இந்திர விழா இருந்ததற்குமான சான்றும் உறுதிப்படுத்தப்படும்.

மேலும் மணிமேகலையில்  சொல்வது போல,  பழைய வழக்கங்களையும் பாரம்பரியமான நம்பிக்கைகளையும் கைவிடுவதால், ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த எச்சரிக்கையாக, இந்த  இந்திர விழா நாம் பார்க்கலாம்.  

மேலும் இயற்கையின் சக்தியையும், கடலின் ஆற்றலையும், இயற்கையின் கட்டுப்படுத்த முடியாத சக்தியையும், இந்த  இந்திர விழா நமக்கு நினைவூட்டுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட பல சமய நம்பிக்கைகளாலும் சமய சமூக மாற்றங்களாலும் இந்திர விழா கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடமிருந்து மறைந்திருக்கிறது. 

ஏனென்றால் மணிமேகலையில் தான் இந்திர விழாவை பற்றிய ஒரு தெளிவான குறிப்பு இருக்கிறது ஆனால் அதே மணிமேகலை தான், பௌத்த சமயத்தை மக்களிடையே கொண்டு சென்ற நூலாகவும் இருந்திருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க சங்க தமிழர்கள் ஏன் இந்திரனை வழிபட வேண்டும் என்ற கேள்வியும் உங்களுக்கு வரலாம்.  இந்திரனுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் நம் தமிழ் மண்ணில் தந்தார்களா என்று கேள்வியும் உங்களுக்கு வரலாம். !

பல புராண கதைகளிலும் வரும் இந்திரன், தேவலோகத்தில் இருப்பான் எப்பொழுதும் பெண்களோடு தான் இருப்பான், என்ற எண்ணம் திரைப்படங்கள் வழியாக நமக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

திரைப்படங்கள் தான் உண்மையான சங்க கால தமிழர்களின் வரலாறு என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களும் இங்கே இருக்கிறார்கள்.  ஆனால் உண்மையான வரலாறு என்பது முற்றிலும் வேறு.

உண்மையில் இந்திரன் என்ற தெய்வம் தமிழ் நிலத்திலும் இருக்கிறது வேதங்களிடம் காணப்படுகிறது. எந்த அளவிற்கு நம் தமிழ் மண்ணில் கொற்ற வைக்கும்,  முருகனுக்கும்,  சிவனுக்கும்,  மாயோனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தமோ,  அதை அளவிற்கான முக்கியத்துவம் தான் இந்திரனுக்கும் தரப்பட்டிருக்கிறது.  

இந்திரனை தமிழ் மண்ணில் வணங்கியதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட சில சிலைகள் மற்றும் நாணயங்களில், இந்திரனின் உருவம் காணப்படுகிறது. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்கள் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியில் இந்திரனை பற்றிய குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியங்களில் அரசர்களை இந்திரனோடு ஒப்பிட்டும் சொல்லி இருக்கிறார்கள்.மருதநிலத்தின் தெய்வமாக தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியலில் இந்திரன் குறிப்பிடப்படுகிறார்.

தமிழர் பண்பாட்டில் இந்திரன் வானின் அரசன், மழையைத் தருபவன், செல்வத்தை வழங்குபவன் எனப் பார்க்கப்படுகிறான். வேதங்களில் இந்திரன் போரின் தெய்வம், மழையைத் தருபவன் மட்டுமல்லாமல், பல வேறுபட்ட பண்புகளையும் கொண்டுள்ளான்.

தமிழ் இலக்கியங்களில் இந்திரன் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறான். அவன் மழையைத் தந்து விவசாயிகளுக்கு உதவுவான், செல்வத்தை வழங்கி மக்களை வாழ வைப்பான். வேதங்களில் இந்திரன் தேவர்களின் தலைவன், அசுரர்களுக்கு எதிராகப் போரிடுபவன் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளான்.

இவ்வாறு தமிழர்கள் வணங்கிய இந்திரன் நம்முடைய விவசாயம் பொருளாதாரம் மக்களுடைய நல்வாழ்க்கை ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவனாக இருக்கிறான்.  கற்பனை கலந்த கதாபாத்திரமாக இல்லை. இருந்தாலும் இந்திரனை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. வேதங்களில் முக்கிய கடவுளாக வடநாட்டில் இந்திரன் கருதப்படுகிறான்.  இந்திரன் என்ற பெயரும் தமிழ் பெயர் கிடையாது. ஆக இந்த பெயர் மாற்றம் தமிழில் எப்படி வந்தது என்பதற்கான தெளிவான ஆதாரமும், நம்மிடம் இல்லை.

தமிழ் மற்றும் வேதங்களில் வருகின்ற  இந்திரன்கள் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன,  வேறுபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திலும் இந்திரன் வணங்கப்பட்டு தான் வருகிறார். 

நம் தமிழ் மண்ணில் காலப்போக்கில் தேவைகளுக்கு ஏற்ப பண்பாடு மாற்றத்திற்கு ஏற்ப,  குறிப்பாக சைவ வைணவ சமயங்களின் வளர்ச்சியால் இந்திரனுடைய முக்கியத்துவம் படிப்படியாக  குறைந்துவிட்டது. இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில், இந்திரவிழா முற்றிலும் மறைந்துவிடவில்லை. சில இடங்களில் இன்னும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

நாகபட்டினம் மாவட்டம் பூம்புகாரில் உள்ள கொற்றவை பந்தலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்திரவிழா தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இலங்கையின் வல்வெட்டித்துறையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 15ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழாவை இந்திரவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு இந்திர விழா சங்ககால தமிழர்களின் வாழ்வியல் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது.  வெறும் மழைக்கான  நிகழ்வாக மட்டும் இல்லாமல், சமூக,கலாச்சார பொருளாதார கழ்வாகவும் இந்திர விழா இருந்திருக்கிறது. 

இனி சித்ரா பவுர்ணமி என்றால் ,உங்களுக்கு கண்டிப்பாக இந்திர விழா நினைவுக்கு வரும்.