“மனிதம் எங்கு செல்கிறது..!” – மனதை உருக்கும் கள்ளக்குறிச்சி சிறுவன் மர்ம மரணம்..
மனிதம் எங்கே செல்கிறது என்று ஒரு மிகப்பெரிய கேள்வியை தற்போது நடந்து இருக்கும் சம்பவங்கள் எழுப்பியுள்ளது. அடுக்கடுக்காக நடக்கக்கூடிய கொலை மற்றும் தற்கொலைகள் மனிதர்களின் மனம் சுருங்கி விட்டது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு காரணம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவனை ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்டெடுத்த நிகழ்வு தான்.
இந்தச் சம்பவமானது கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தலில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் திருமூர்த்தி என்ற கூலி தொழிலாளியின் குழந்தையின் மர்ம மரணம் தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
கடந்த 17ஆம் தேதி தனது மகன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடிப் பார்க்கும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து சிறுவனை தேடும் பணியில் காவல்துறையும் களம் இறங்கி வலை வீசி தேடி வந்தார்கள். எனினும் அந்த சிறுவன் பற்றி எந்தவிதமான தகவல்களும் காவல்துறைக்கும், பெற்றோர்களுக்கும் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து காவல் நிலையங்களுக்கு சிறுவனின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமானது. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் திருமூர்த்தியின் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸிங் துர் நாற்றம் வெளி வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சந்தேகத்தின் பெயரில் அவர்கள் திறந்து பார்த்தபோது அந்த ஸ்பீக்கரில் சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல், அருகில் இருந்த மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டு இதில் அடைக்கப்பட்டாரா? அல்லது எதிர்பாராமல் சிக்கிக் கொண்டு இறந்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேகத்தின் பெயரில் அவரது சித்தப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.