“யாரும் வெல்ல முடியாத கோட்டை..!” – ஜன்ஜிரா கோட்டை பற்றிய வரலாறு..
இந்தியாவில் நாகரிகங்கள் தோன்றிய காலம் முதற்கொண்டு பல வகையான ராஜ்ஜியங்களை, ராஜாக்கள் ஆண்டு இருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஆளும் சமயத்தில் அவர்களின் அடையாளமாக கோட்டைகளையும், அரண்மனைகளையும், மாளிகைகளையும், நினைவு சின்னங்களையும் விட்டு சென்று இருக்கிறார்கள். இது அவர்களது கட்டிடக்கலையை நமக்கு பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் யாருமே நெருங்க முடியாத, வெற்றி கொள்ள முடியாத அற்புதமான கோட்டையாக இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிக்கக்கூடிய கோட்டை என்றால் அது 17 நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜன்ஜிரா கோட்டை தான்.
எவ்வளவோ போர்கள் மன்னர்கள் மத்தியில் இந்தியாவில் நடந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் இருந்தும் நாடு பிடிக்க எதிரிகள் வந்தால் முதலில் தாக்கக்கூடிய கோட்டைகள் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் இந்த கோட்டை மட்டும் எப்படி தப்பியது என்று நீங்கள் நினைக்கலாம்.
மேலும் இந்த கோட்டையில் சிறப்புகள் என்ன வரலாறு என்ன சொல்கிறது. எதனால் இந்த கோட்டையை மட்டும் யாராலும் நெருங்க முடியவில்லை என்பது போன்ற விடயங்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு விடை தரும்.
இந்த ஜன்ஜீரா கோட்டை இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் கடலை ஒட்டி காணப்படுகிறது. இந்த பகுதியை கொங்கன் கரை என்று அழைக்கிறோம். இன்று அளவும் எந்த ஒரு வேற்று அரசர்களாலும், நெருங்க முடியாத கோட்டையாக திகழக்கூடிய இது 14 மற்றும் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம்.
மேலும் இந்திய கடற்கரையில் உள்ள கோட்டைகள் பீஜப்பூர், கோல்கட்டா மற்றும் அகமது நகர், சுல்தான்களுக்கும் ஹைதராபாத் நிஜாம் மற்றும் விஜயநகரத்தின் சத்தி வாய்ந்த இந்து சாம்ராஜ்யத்திற்கும் இடையே நடந்த போர்களுக்கு சாட்சியாக உள்ளது.
இந்த சமயத்தில் தான் மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான முழு அருகே அரபிக் கடலில் உள்ள ஒரு தீவில் இந்த ஜின்ஜிரா கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. சுற்றிலும் கடல் சூழப்பட்ட நிலையில் தனித்து நிற்கும் இந்த கோட்டை தனித்துவமானது.
இந்த கோட்டையை நிஜாம் ஷாஹி வம்சத்தை சேர்ந்த அகமது நகர் சுல்தானின் அப்சினீய மந்திரி மாலிக் அம்பரால் கட்டப்பட்டது. 22 ஏக்கர் நிலப்பரப்பு இருக்கக்கூடிய இந்த கோட்டையை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனதாம். ஓவல் வடிவத்தில் இருக்கக்கூடிய இந்த கோட்டையின் சுவர் சுமார் 40 அடி உயரம் கொண்டது மற்றும் இதில் 19 வட்டமான தாழ்வாரங்கள் உள்ளது.
இன்றும் பீரங்கி பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் சென்றால் பார்க்க முடியும். மேலும் கடல் வழியாக வரும் கப்பல்கள் முழுவதையும் கண்காணிக்கும் படி இந்த கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் அரண்மனை குளியல் இடம் போன்றவற்றை நீங்கள் காணலாம். அத்தோடு சிறப்புமிக்க நன்னீர் குளம் ஒன்றும் அமைந்துள்ளது.
கடலுக்கு மத்தியில் இந்த கோட்டை இருப்பதால் நீங்கள் கப்பல் வழியாக மட்டுமே இந்த கோட்டையை அடைய முடியும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை இந்த கோட்டையை யாரும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, என்பது இந்த கோட்டையின் சிறப்பாக கூறலாம்.
இவ்வளவு ஏன் மாவீரன் சத்ரபதி சிவாஜி கூட இந்த கோட்டையை பிடிக்க முயற்சி செய்தும் அவரால் பிடிக்க முடியவில்லை. இன்று சில இயற்கை சீற்றத்தால் தாக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த கோட்டை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் கனக கம்பீரமாக நிற்பதை பார்க்கும் போது இதன் வரலாறு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.