• April 5, 2024

சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடியை ஏற்றுவதில் இருக்கும் அர்த்தங்கள்!

 சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடியை ஏற்றுவதில் இருக்கும் அர்த்தங்கள்!

நம் நாட்டில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று கட்டாயம் தேசிய கொடி ஏற்றுவார்கள். ஆனால் இந்த இரு தினத்திலும் தேசிய கொடி ஏற்றுவதில் வேற்றுமைகள் இருக்கிறது. பெரும்பாலும் அதை நாம் உற்று நோக்கியதில்லை. இந்த இரு தினங்களிலும் இரு வகையான, இரு வேறுபட்ட முறையில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்!


சுதந்திர தினம்

சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியானது, கம்பத்தின் கீழே இரண்டு கயிறுகளால் பூக்களோடு சேர்த்து
மடித்துக் கட்டப்பட்டு இருக்கும். கொடி ஏற்றுபவர் பிரதமர். பிரதமர் கொடியேற்றும் போது ஒரு கயிற்றை, மேல் நோக்கி இழுப்பதின் மூலமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் கொடி, கம்பத்தின் உச்சிக்கு சென்றதும் இன்னொரு கயிற்றை இழுக்கும் போது கொடி அவிழ்ந்து உள்ளே இருக்கும் பூக்களை சிதற விட்டபடிபறக்க ஆரம்பிக்கும். இப்படி கொடியேற்றுவதின் நோக்கம், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்பைப் பெருமைப்படுத்தவே
கொடி கீழே இருந்து மேலே சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு பறக்கவிடப்படுகிறது.

குடியரசு தினம்

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, கொடி கம்பத்தின் உச்சியில் மடித்துக் கட்டப்பட்டு இருக்கும். கொடியேற்றுபவர் குடியரசுத் தலைவர். இவர் கம்பத்தின் மேலே இருக்கும் ஒரே ஒரு கயிற்றை இழுப்பதின் மூலமாக கொடி சுலபமாக அவிழ்ந்து பறக்கும். நம் நாடு இப்போது சுதந்திரமாக இருப்பதை இது குறிக்கும்.


பிரதமர் சுதந்திர தின நாளில் மட்டுமே கொடியை அரசின் சார்பில் ஏற்றுகிறார். ஏனெனில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசியலமைப்பு அறிவிக்கப்படவில்லை. 1950 ல் தான் இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அது முதல் குடியரசு நாளில் ஜனாதிபதி கொடி ஏற்றி வைக்க ஆரம்பித்தார்.

ஆக இந்த முறைப்படிதான் தேசியக்கொடிகளை அந்தந்த நாட்களில் ஏற்றவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா! என்பது அனைத்து இடங்களிலும் சரியாக கணிக்க முடியவில்லை. இந்த விளக்கத்தை நீங்கள் நேரில் கண்டிருந்தால் அதை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.