அவள் அப்படித்தான் – உடலரசியல்!
பாடலதிகாரம் – 1
உறவுகள் தொடர்கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே!
பாடலின் கதாநாயகி மஞ்சு, ” ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறக்கிறாள். அவள் அப்படித்தான்”. நமக்கான வெளி தேடும் எல்லாப் பெண்களும் அப்படித்தான்…!
இந்தப் பாடல் வரிகளை, இசையோடு கேட்கும்போது மனதிற்கு இதமாக இருக்கும். ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கான வடிகாலாக இந்தப் பாடல் இருப்பதாகவே தோன்றும். ஆனால், படத்தின் பின்னணியில், பெண்ணிற்கான உறவுச் சிக்கல்களை, வாழ்க்கை முரண்களை மற்றும் ஆண்-பெண் உறவின் யதார்த்தங்களை, முரண்களை இந்தப் பாடல் பிரதிபலிக்கும்.
வாழ்க்கையில் தனக்கான தேடல்களில், வெளியில் வரும் ஒரு பெண் இந்தச் சமூகச் சூழல்களில் நம்பிக்கை துரோகங்களை சந்திப்பது, வெளியில் பயணிக்கும் ‘அவளுக்குத் தேவை ஒரு ஆண்’ என்று நினைத்தபடியே பல ஆண்கள் அவளை நெருங்க முற்படுவது. அதனால் அவள் மேலும் இறுகுவது என்பதாக இப்படத்தின் காட்சிப்படுத்துதல் அமைந்திருக்கும்.
குறிப்பாக, இந்தப்பாடல், ‘மனக்காயங்களுக்கு மருந்தாக ஒருவன் வந்துவிட்டான்’ என நினைத்து, அவள் தன் உறவைத் தொடர, தனக்கான காமத்தின் தேவையாக, படுக்கையை பகிர்ந்துவிட்டு பிறகு சிஸ்டர் எனக்கூறும் மூன்றாம்தர ஆண் பாடும் ஒரு பாடல்.
நம்மில் பல பெண்களும், இத்தகைய ஆண்களை ஏதாவது ஒரு சூழலில் கடந்து வந்திருப்போம் என்றே நினைக்கிறேன். அவிழ்க்கவே முடியாத உறவுச் சிக்கல்கள், புரிந்து கொள்ளவே முடியாத உறவின் புதிர்கள் என சிலநேரங்களில் சிக்கித் தவிக்கும் பெண்கள் அதை மேலும் சிக்கலாக்கும் ஆண்களை ஏதாவதொருவிதத்தில் எதிர்கொண்டபடியேதான் இருக்கிறார்கள்.
சிலநேரங்களில் பெண்களுக்குள் ஒரு சலிப்பை ஏற்படுத்தி, தன்னைத்தானே நத்தைக்கூட்டிற்குள் அல்லது தனக்கான முகமூடிகளுக்குள் புதைத்து கொள்வதற்குத்தான் இத்தகைய உறவுகள், தேடல்கள் வழிவகுத்து விடுகின்றன.
எல்லாத்துக்கும் ஒரே பதில்தான்!
“தேடல் தவறா? இப்படி எல்லாம் நடக்கறதால நான் வெளில வர்றதே பிரச்சனையா? எப்படித்தான் இவர்களை கடப்பது” என்ற பல்வேறு கேள்விகள் நம்மைப் போன்ற பெண்களுக்கு எழும்.
எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் – அந்த படத்தின் கிளைமாக்சில் வருவதுபோல், பெண்விடுதலை என்று எதுவும் தெரியாத பெண்ணாக வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடலாம் அல்லது எனக்கான வெளியை தேடும்போது, இத்தகைய சறுக்கல்கள் வரும்.
நான் விழுவேன், எழுவேன் மீண்டும் விழ, எழ என்று என்னை சரியாக செதுக்கிக்கொண்டு முன்னேறுவேன். முன்பைவிட வேகமாக, பலமாக, எச்சரிக்கையுடன், எனக்கான வெளியில் என்று போய்கிட்டே இருப்பேன், எனப் போய்கிட்டே இருக்கலாம்.
பாடலின் கதாநாயகி மஞ்சு, “மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். பிறக்கிறாள். மீண்டும் ஒரு முறை இறக்கிறாள் இருப்பினும் அவள் மீண்டும் பிறக்கிறாள். அவள் அப்படித்தான். “நமக்கான வெளி தேடும் எல்லாப் பெண்களும் அப்படித்தான்…!”
பாடலில் எனக்குப் பிடித்த சிலவரிகள்:
உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
உஷா பாலசுப்ரமணியம்
ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாத ராஜாளி…தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தைனையாளர்.