இனி 10-ஆம் வகுப்பு சான்றிதழில் பயிற்று மொழியும் இடம்பெறும் !!!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீதம் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்றுமொழி சேர்க்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசு, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் சட்டசபையில் 20% தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றுகளை தயார் செய்யும் முதல் முயற்சியாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்றுமொழி இணைக்கப்படவுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பயிற்றுமொழியை இணையத்தில் பதிவு செய்யுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் எனும் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் கொடுக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர் அந்த தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போதே அந்த சான்றிதழில் பயிற்று மொழியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் சுலபமாக பெற இயலும்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.