41 ஆண்டு தவத்திற்கு கிடைத்த வெண்கல வரம் !!

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை நாடெங்கும் உள்ள மக்களும், விளையாட்டு ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகளின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் ஜெர்மனி தனது முதல் கோலை அடித்து இந்திய ரசிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
போட்டியின் இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஒரு விறுவிறுப்பான முடிவை நோக்கி இப்போட்டி சென்றது. போட்டியின் இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

என்னதான் இந்திய நாட்டிற்கு ஹாக்கி தேசிய விளையாட்டாக இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பதக்கம் எதுவும் வெள்ளாமல் இந்திய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். 41 ஆண்டுகள் பதக்கமின்றி இருந்த தவத்திற்கு பலனாக இன்று வெண்கலப் பதக்கம் வென்று உலக அரங்கில் இந்தியா தனது புது வரலாறை உருவாக்கியுள்ளது. இது இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டி நாட்டின் பல பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய ஹாக்கி அணியின் வருங்கால செயல்பாடுகளுக்கு இந்த வெற்றியும் பதக்கமும் உறுதுணையாக இருக்கும் என நம்பலாம்.
வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு Deep Talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.